AR Murugadoss: 22 ஆண்டுகளாக ஒரு படத்தை எடுக்க முடியாமல் தவிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் - என்ன காரணம்?
தமிழ் சினிமாவில் தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்கார், தர்பார் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு ஷூட்டிங் செல்லும் படம் கிட்டதட்ட தோல்வியை சந்திக்கும் என்பதை நான் உணர்ந்தேன் என்பதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்கார், தர்பார் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தயாரிப்பாளராகவும் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே, 10 எண்றதுகுள்ள, ரங்கூன் என பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது 16 ஆகஸ்ட் 1947 என்ற படத்தை தயாரித்துள்ளார்.
கனவுப்படம்
இதனிடையே நேர்காணல் ஒன்றில், தன்னுடைய கனவு படம் என ஒன்றை ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார். அதில், “நான் தீனா படம் பண்றதுக்கு முன்னாடி தயாரிப்பாளர் சக்கரவர்த்தியிடம் பேசினேன். அப்போது அவர் சிட்டிசன் படத்தை தொடங்கியிருந்தார். என்னிடம் அஜித்தை தவிர வேறு யாரையும் படம் பண்ணமாட்டேன் என சொன்னார். உடனே நான் என்ன நீங்க தேவர் பிலிம்ஸ் மாதிரி பேசுறீங்க என கேட்டேன். சக்கரவர்த்தியும் தேவர் பிலிம்ஸ்ல வர்ற விலங்குகள் வச்சி படம் எடுக்குற மாதிரி ஏதாவது கதை கொண்டு வா என சொன்னார். நானும் குரங்கை வைத்து ஒரு கதை ரெடி பண்ணி சொன்னேன். சக்கரவர்த்திக்கு கதை பிடித்துவிட்டது.
இந்த படத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் போது தான் விலங்குகள் நல ஆணையத்தின் விதிகள் தெரிய வருகிறது. பின்னர் தான் எனக்கு சர்க்கஸ் என்ற ஒரு கலாச்சாரமே குறைந்து வருவது தெரிய வந்தது. ஆனால் அதற்குள் தீனா படம் கிடைக்க அந்த குரங்கு படம் கைவிடப்பட்டது. ஆனால் என் மனதிற்குள் எப்படியாவது இந்த கதையை படமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
அப்புறம் தான் டபுள் மேக்கர்ஸ் நிறுவனத்திடம் கதை அனுப்பினேன்.அவர்களுக்கு கதை பிடித்திருந்தது. கொரோனா காலக்கட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இடையில் இந்தி திரையுலகம் நஷ்டப்பட்டதால் இந்த பிளான் நிலுவையில் உள்ளது. இதில் அக்ஷய் குமார் நடிக்கிறேன் என சொன்னார். ஆனால் அந்த பிளான் இன்றும் உள்ளது” என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
தர்பார் தோல்வி குறித்து கருத்து
தர்பார் படத்தை தொடங்கியபோது ரஜினி என்னிடம் மார்ச்சில் படப்பிடிப்பை தொடங்க வேண்டுமென தெரிவித்தார். ஜூனில் மும்பையில் மழைக்காலம் தொடங்கும்.ஆகஸ்டில் அவர் கட்சி தொடங்கும் திட்டத்தில் இருந்தார். நான் ரஜினியின் தீவிர ரசிகர். அதனால் தர்பார் படத்தை எந்த காரணம் கொண்டும் இழக்க விரும்பவில்லை. அன்றைய காலக்கட்டத்தில் அது ரஜினியின் கடைசிப் படமாக இருக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. என்னிடம் படம் பண்ணலாம் என பிப்ரவரியில் சொன்னார். மார்ச்சில் தொடங்கி ஜூன் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என சொன்னார். இந்த வாய்ப்பை இழந்து விடக்கூடாது என நான் கணக்குப் போட்ட இடத்தில் தான் தப்பு செய்து விட்டேன். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் திறமை இருந்தாலும் பலிக்காது.
ஆமீர்கான் என்னிடம் ஒருமுறை சொன்னார். படத்தின் அறிவிப்பின்போதே இந்த தேதியில் ரிலீஸ் என அறிவித்தால் 50% அந்த படம் தோல்வி தான். கிட்டதட்ட 80 சதவிகிதம் ஷூட்டிங் முடிந்த பிறகு தான் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய வேண்டும் என சொன்னார். அது எவ்வளவு சரி என்பது தர்பார் படத்தில் நான் உணர்ந்தேன்.
அந்த வேகம், ஒரு ஆசை என என்னவாக இருந்தாலும் இயக்குநர் என்ற இடத்தில் இருந்து என்றைக்கும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது. இப்ப வருகிறவர்கள் எல்லாம் சரியான திட்டத்துடன் வருகிறார்கள். தர்பார் படத்தின் ஷூட்டிங்கின் போது கடைசி நேரத்தில் காட்சியமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது என முருகதாஸ் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.