தேர்தல் வரப்போகுது எப்போ வருவார் விஜய்?.. திருப்புவனம் போனவர்கிட்ட கேளுங்க.. இயக்குநர் அமீர் விமர்சனம்
தேர்தல் வரப்போகுது இனி எப்போதான் விஜய் வெளியே வருவார் என்பதை நீங்கதான் கேட்க வேண்டும் என இயக்குநர் அமீர் விமர்சனம் செய்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலாளி அஜித் குமாரை போலீசார் அடித்தே கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷித் ராவத் இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் நடிகர் விஜய் அஜித் குமாரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படம் வெளியானது. இந்நிலையில், இயக்குநர் அமீர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது சர்ச்சையாக மாறியுள்ளது.
அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்
அஜித் குமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து வழக்கை விசாரிக்க வேண்டுமென விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தவெக சார்பில் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளனர். வரும் 6ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கப்பட்டது.
தேர்தல் வரப்போகுது எப்போ வருவார் விஜய்?
இந்நிலையில், இயக்குநர் அமீர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஜயை கடுமையாக விமர்சித்து பேசினார். அதில், தேர்தல் வரப்போகுது, இனிமேலாவது விஜய் வெளியா வருவாரான்னு தெரியலை. நீங்கதான் அவரை போய் கூப்பிடனும். போய் சொல்லுங்க, தேர்தல் வந்திடுச்சு நேரில் வந்து பேசுங்க என்று கூப்பிடுங்கள். திருப்புவனத்திற்கு சென்றபோது நீங்களும் கேமிராவை தூக்கிக் கொண்டு சென்றிருக்கலாம். விஜய் எதற்காகவது குரல் கொடுத்திருக்கிறாரா என கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சியை குறை கூறாதீர்கள்
திமுக ஆட்சியில் நீங்க நலமாக இருக்கீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமீர், எங்க வீட்டில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். உங்க வீட்டிலும் அப்படித்தான் இருப்பார்கள். யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு அரசு துணை போயிருக்கிறதா? செய்த தவறை மறைத்து பேசியுள்ளதா என்பதை சொல்லுங்க. பாலியல் சீண்டல் நடந்திருந்தால் அதற்கு அரசு துணை போனதாக இருந்தால் அது தவறு. அரசு சரியாக செய்திருக்கிறது. திமுக அரசு மீது களங்கம் ஏற்படுத்த பலரும் குறை கூறுவதை கருத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என அமீர் தெரிவித்தார்.
உண்மையை மறைத்த எடப்பாடி பழனிசாமி
இதைத்தொடர்ந்து பேசிய அவர், சாத்தான்குளத்திற்கு கொந்தளித்தவர்கள், திருப்புவனத்திற்கு மெளனம் காப்பது ஏன் என்ற கேள்வியை பார்க்க முடிகிறது. ஆனால், அப்போதைய அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாத்தான்குளம் சம்பவத்தை வெளிப்படையாக மறைத்தார். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று பொய் சொன்னார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாகக் கூறினார். அப்படி ஏதும் இப்போது நடந்திருக்கிறதா என அமீர் கூறினார்.





















