செட்டுக்கு வரது லேட்..எல்லாமே சிஜி..சிகந்தர் பட தோல்விக்கு சல்மான் கான் மீது பழிபோட்ட ஏ.ஆர். முருகதாஸ்
இந்தியில் சல்மான் கானை வைத்து சிகந்தர் படத்தை இயக்கியதில் தான் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி ஏ.ஆர் முருகதாஸ் பகிர்ந்துகொண்டுள்ளார்

சிகந்தர் தோல்வி குறித்து ஏ ஆர் முருகதாஸ்
தர்பார் படத்திற்கு பின் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள படம் மதராஸி. சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ளது. ருக்மினி வசந்த் , பிஜூ மேனன் , விக்ராந்த் , வித்யுத் ஜம்வால் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழில் 4 ஆண்டுகளாக ஃபீல்டில் இல்லாவிட்டாலும் இந்தியில் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் சல்மான் கானின் சிகந்தர் படம் வெளியானது. இந்த படத்தில் தோல்விகுறித்து மதராஸி ப்ரோமோஷன்களில் முருகதாஸ் பேசியுள்ளார். குறிப்பாக படத்தின் தோல்விக்கு தான் காரணம் இல்லை என்றும் படத்தின் நாயகன் சல்மான் கான் உட்பட பல்வேறு விஷயங்கள் படப்பிடிப்பில் மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்
சல்மான் கான் உடன் பணியாற்றுவது கஷ்டம்
" சிகந்தர் படத்தின் கதை என் மனதிற்கு மிக நெருக்கமான கதை. ஆனால் பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ணும்போது நம்மால் 100 சதவீதம் கதைக்கு நேர்மையாக இருக்க முடியாது. குறிப்பாக சல்மான் கானை வைத்து படம் எடுப்பது என்பது எளிதானது இல்லை. அவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்ததால் அவர் பகலில் படப்பிடிப்புக்கு வர மாட்டார். இதனால் பகல் காட்சிகளை எல்லாம் இரவில் செட் போட்டு எடுக்க வேண்டிய கட்டாயம். இரண்டு குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வரும் காட்சியை இரவு 2 மணிக்கு எடுத்தோம் . அதை எடுக்கும் போது அவர்கள் களைப்படைந்து தூங்கிவிட்டார்கள். படப்பிடிப்பு தொடங்குவது இரவு 8 மணி. எல்லா காட்சிகளும் கிராஃபிக்ஸ் , செட்டிற்கு சல்மான் கான் வருவதும் லேட். இப்படி பல விஷயங்கள் அந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தன. நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் " என ஏ.ஆர் முருகதாஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிகந்தர் படத்தின் தோல்விக்கு சல்மான் கான் காரணம் என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் சல்மான் கான் ரசிகர்கள் முருகதாஸின் சுமாரான கதையும் இயக்கமும் தான் சிகந்தர் படத்தின் தோல்விக்கு காரணம் என்றும் படம் தோல்வி அடைந்தபின் பழி போடுவது முருகதாஸின் வழக்கம் என்றும் விமர்சித்து வருகிறார்கள்





















