Vetrimaaran: ”யாரையும் தலைவர்னு சொல்லாதீங்க...” : விடுதலை இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் பேச்சு
”இளையராஜாவின் அருகில் இருந்து அவரின் இசைத்திறமை எப்படி வெளிப்படுகிறது என்பதை பார்த்தது தான் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு” - வெற்றிமாறன்.
விடுதலை படம் தொடங்கியதற்கு இளையராஜா தான் காரணம் என்றும், சினிமா நடிகர்களையும் சரி, இயக்குநர்களையும் சரி தலைவர் என அழைக்க வேண்டாம் என்றும் வெற்றிமாறன் பேசியுள்ளார்.
இசை வெளியீட்டு விழா
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநரும், தேசிய விருதுகள் வென்றவருமான வெற்றிமாறன் அசுரன் படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம் ‘விடுதலை’.
நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
முதன்முறையாக வெற்றிமாறன் - இளையராஜா இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். வேல்ராஜ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சூரி போலீஸ் கதாபாத்திரத்திலும்,விஜய் சேதுபதி போராளியாகவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
’தலைவர்னு சொல்லாதீங்க’
இந்த மாத இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று (மார்ச்.09) விடுதலை படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:
"நான் கொஞ்ச நாள் முன்னாடி தான் ஒரு இடத்துல சொன்னேன். சினிமா நடிகர்கள தலைவர்னு சொல்றது எனக்கு ஏற்புடையதா இல்லனு. நடிகர்களுக்கு அதுதான் என்றால் இயக்குநர்களுக்கு அதைவிட அதிகம்.
விடுதலை படத்தோட கஷ்டங்கள்.. எனக்கு கடினங்கள் இல்ல. நமக்கான சவால்கள நாமே ஏத்துக்கணும்.இந்த சவால்கள ஏற்றுக்கொண்ட, பொறுத்துக்கொண்ட எல்லாருக்கும் நன்றி.
’இளையராஜா தான் காரணம்’
இளையராஜாவ பக்கத்துல இருந்து பாக்கறதே சந்தோஷம். இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த உடனே அனுப்பிடணும், எனக்கு பட வேலைகள் இன்னும் இருக்குனு சொன்னார். நம்ம எல்லாருக்கும் இசை தெரியும்னு தெரிந்து தான் அவர் இசையமைப்பார். நோட்ஸ் எழுதிவிட்டு அவற்றை விளக்குவார்.
பாலுமகேந்திராவிடம் வேலை பார்க்கும்போது அவரை தூரத்தில் இருந்து தான் பார்த்திருக்கிறேன். விடுதலை படம் தொடங்கியதற்கு இளையராஜா தான் காரணம். அவரை சந்தித்து பேசியபோது என்ன படம் எடுக்கப் போற கதை இருந்தா சொல்லு எனக் கேட்டார்.
நான் உடனே இளையராஜாவிடம், “படம் எடுத்துட்டு வந்து சொல்லட்டுமா” என பதில் கேள்வி கேட்டேன். எப்படி நாளும் எனக்கு ஓகே தான் என சொன்னார். முதலில் 45 நிமிடங்களுக்கு படம் எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் காட்டினேன். அந்தக் காட்சிகளை பார்த்துவிட்டு இளையராஜா ‘வழிநெடுக காட்டு மல்லி’ என்ற பாடலை இசை அமைத்துக் கொடுத்தார். அந்தப் பாடலையும் அவரே எழுதினார்.
’கற்றுக்கொண்டது இதுதான்...’
பின்னர் நான் எடுத்து வந்த காட்சிகளைக் கொண்டு ஏதாவது பின்னணி இசை அமைத்துக் கொடுத்தால் எடிட் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்று இளையராஜாவிடம் சொன்னேன்.
“என்ன மாதிரி வேண்டும்?” எனக் கேட்டார் நான் உடனே மனதில் ஒரு உணர்வை நினைத்துக் கொண்டு சொன்னேன் அதற்கேற்ப உடனே மெட்டு அமைத்துக் கொடுத்தார். நான் நினைத்ததும் அவர் இசைத்ததும் ஒன்றாக இருந்தது. இளையராஜாவின் அருகில் இருந்து அவரின் இசைத்திறமை எப்படி வெளிப்படுகிறது என்பதை பார்த்தது தான் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.
அவர் என்னுடன் பேசும் ஒவ்வொரு விஷயமும் மிகப்பெரிய நான் கற்றுக்கொள்ளும் விஷயமாக அமைகிறது. இங்கு உள்ள அனைவருமே இளையராஜாவின் பாடலைக் கேட்டு வளர்ந்தவர்கள் தான். எனக்கு இந்த வாய்ப்பு அளித்த இளையராஜாவுக்கு நன்றி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்.