Deepika Padukone: அப்படிப்போடு.. கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த தீபிகா படுகோனே.. குஷியில் ரசிகர்கள்!
பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான காதல் ஜோடியாக வலம் வரும் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி விரைவில் தாங்கள் பெற்றோராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான காதல் ஜோடியாக வலம் வரும் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி விரைவில் தாங்கள் பெற்றோராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை தீபிகா வெளியிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
இவர்களின் திருமணம் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகளான தீபிகா படுகோன், மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்தார். தொடர்ச்சியாக 2006 ஆம் ஆண்டு கன்னடத்தில் நடிகையாக அறிமுகமான தீபிகா படுகோனே, 2007 ஆம் ஆண்டு ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில் நடிகையாக இந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இப்படம் அவரை ஏராளமான ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது.
முதலில் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்த தீபிகா படுகோனேவின் உறவு சில ஆண்டுகளிலேயே முறிந்தது. இதனைத் தொடர்ந்து ராம் லீலா படத்தில் ரன்வீர் சிங்குடன் நடித்தபோது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இருவரும் இணைந்து பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், 83 ஆகிய படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இதனிடையே கடந்த சில வாரங்களாகவே தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. அதேசமயம் 77வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது வழங்கும் பாஃப்டா நிகழ்ச்சியில் பளபளக்கும் சேலை ஒன்றை தீபிகா அணிந்திருந்தார்.
இதில் அவர் சேலை அணிந்திருந்த விதம் கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்களிடத்தில் எழுப்பியது. தீபிகா கடைசியாக ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் சிறிய கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் 'சிங்கம் அகெய்ன்' படத்தில் தீபிகா நடித்து வருகிறார். இதில் ரன்வீர் சிங், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் மற்றும் கரீனா கபூர் ஆகியோருடன் தீபிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.