மறைந்த நடிகர் டவுசர் பாண்டி… விஜய் செய்த மறைமுக உதவி… 'காக்கா' கோபால் வெளியிடும் சீக்ரெட்ஸ்!
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் பாரியின் காமெடி விஜய்க்கு ரொம்பவே பிடித்து இருந்ததால் ஒரு நல்ல நகைச்சுவை கலைஞனை இழந்துவிட்டோம் என்றெல்லாம் வருத்தத்துடன் அப்போது சொல்லி இருந்தாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய படங்கள் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தாலும் ஆரம்பத்தில் விஜய் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன்பிறகு நடனம், நடிப்பு என அனைத்திலும் ஆர்வம் காட்டி தன்னுடைய விடா முயற்சியால் இந்த நிலைமைக்கு வந்து உள்ளார் விஜய். தளபதி விஜய் கேரியரிலேயே திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது துள்ளாத மனமும் துள்ளும். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதுடன் விஜய்க்கு பாராட்டையும் வாங்கித் தந்தது. இயக்குனர் எழில் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்த படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. இந்த படம் வெளியாகி 22 வருடங்கள் கடந்துவிட்டது. இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் டவுசர் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் பாரி வெங்கட். இவர் எஸ்வி சேகரின் நாடகங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் இவரை பற்றி பலருக்கும் தெரியாது. துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்து இருந்தாலும் பயங்கரமாக கலக்கியிருப்பார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த பாரி வெங்கட் திருநெல்வேலி படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை சென்று விட்டு ஆம்னி பஸ்ஸில் சென்னை திரும்பியபோது விபத்தில் மரணமடைந்தார். சினிமாவில் உச்சத்துக்கு சென்ற சில மாதங்களிலேயே நடிகர் பாரி வெங்கட் இழப்பு சினிமா ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தது.
இவர் ஒரு படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் பற்றியும் நடிகர் விஜய் பற்றியும் நகைச்சுவை நடிகர் காக்கா கோபால் பேசியுள்ள நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. பலருக்கும் பரிச்சயமான ஒருவருடைய இறப்பு கூட இருப்பவர்களை மட்டுமல்லாமல் அவர்களை பற்றி தெரிந்து கொண்டவர்களுக்கும் வருத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கும். அந்த மாதிரிதான் இறப்பு நடந்து பல வருடங்கள் ஆனாலும் அந்த வேதனை அவர்களை பிடித்தவர்களை விட்டு விலகுவதில்லை. அதுபோல தற்போது துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் டவுசர் பாண்டி ஆக நடித்த பாரி வெங்கட் மறைவு குறித்து காமெடி நடிகர் உருக்கமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
நமக்கு பிடித்தவர்களையோ, பரிச்சயமானவர்களோ இந்த உலகத்தை விட்டு விலகி போய் பல வருடங்கள் ஆனாலும் அவர்களுடைய நினைவு வரும்போது அவர்களை பற்றி அவர்கள் செய்த உதவி பலருக்கும் நினைவிற்கு வந்து விடும். அந்த மாதிரி தான் தற்போது பாரி வெங்கட் பற்றி பேசி காக்கா கோபால் உருகியுள்ளார். அதில் அவர் பாரி அண்ணனை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நான் இருந்தபோது என்னை சந்திக்கும் போதெல்லாம் அவர் நான் கேட்காமலே காசு கொடுத்து விட்டு போவார். அவர் பணக்காரர் எல்லாம் இல்லை. இருந்தாலும் அவர் கிட்ட கடைசியாக இருக்கிற காசு கூட என்கிட்ட கொடுத்து விட்டு சிரித்து விட்டு போவார். அந்த மாதிரி நல்ல மனசு உள்ளவர். எனக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார் என்று உருக்கமாக பாரி வெங்கட் பற்றி பேசியிருக்கிறார். "அவர் வீடு தி நகரில் ஒரு காம்ப்லக்ஸ் மாடியில் இருந்தது, சிறிய வீடுதான், 250 ரூபாய் வாடகை, அதில் மனைவி, அம்மா, இரண்டு பெண் குழந்தைகள் எல்லாருக்கும் சினிமாவின் மூலம் வரும் வருமானத்தில்தான் செலவு செய்ய வேண்டும்.
அவரது வீட்டிற்கு எங்களை அழைத்து செல்வார், உள்ளே போகும்போதே, ஒரு சவுண்டோடே செல்வார், சாப்பாடு எடுத்து வை டி, என்பார். ஒன்றும் பெரிதாக இருக்காது, தயிர் சாதம்தான் இருக்கும், அதையும் சரியாக பகிர்ந்து எங்களுக்கு கொடுத்துவிட்டு தான் சாப்பிடுவார். ஒருமுறை நடந்து வர்றியேடா, ஒரு சைக்கிள் வாங்கிக்க என்று, 500 ரூபாய்க்கு செக் எழுதி கொடுத்துவிட்டார். அப்போது அவர் மனைவி உள்ளே அழைத்து பேசினார், செலவுக்கு வைத்திருந்த காசு என்று, அவர் தப்பா நெனச்சுக்க போறான் பேசாதன்னு சொல்லிட்டு வந்துட்டார், சின்ன வீடுன்றதால எல்லாம் கேக்குது எனக்கும். அன்னான் வெளில வந்ததும், அண்ணன் இன்னைக்கு நேரம் நல்லா இல்ல, நாளைக்கு வந்து வாங்கிக்குறேன்னு கொடுத்தேன். அது மாதிரி அவருக்கே இல்லாதப்போ கூட உதவி செஞ்சிருக்கார்." என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் பலர் பாரி மட்டும் இப்ப இருந்திருந்தால் வடிவேலுக்கே டப் கொடுத்திருப்பார் என்று அனைவரும் கூறிவருகின்றனர். அதுபோலத்தான் காக்கா கோபாலும் கூறியிருக்கிறார். "சினிமாவில் பாரி அண்ணன் மிகப் பெரிய கலைஞன். அந்த ஸ்பாட்டில் காமெடி ட்ராக் பண்ணுவார். எப்போதும் காமெடி காமெடி காமெடி பற்றியே முழுநேரமும் நினைத்துக்கொண்டிருப்பார். வெட்டி கதை பேசினால் திட்டுவார், காமெடி பேச வேண்டும். தப்பாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதாவது காமெடி பற்றிதான் பேச வேண்டும், அதிலிருந்து இரண்டு காமெடி எடுப்பார் பாரி அண்ணன். ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் எல்லாம் நடிகர்கள் என்று கூறிக்கொண்டு சுற்றுபவர்கள்தான், ஆனால் பாரி அன்னான் நிஜமான ஆர்ட்டிஸ்ட். வேறு எதை பற்றியும் சிந்திக்காமல் சரியாக அவர் என்ன செய்ய போகிறார் என்பதில் குறியாக இருப்பார், அவரிடம் வேறு எதுவும் அந்த நேரத்தில் பேசினால் கோபப்படுவார்." என்று அவரின் அர்ப்பணிப்பு பற்றி பேசினார்.
அதுமட்டுமல்லாமல் பாரி இறந்த செய்தி கேட்டு நடிகர் விஜய்யும் அவருடைய தந்தையும் பாரி வெங்கட்டின் வீட்டிற்கு வந்து மனைவியிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு அஞ்சலி செலுத்திவிட்டு போனார்களாம். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் பாரியின் காமெடி விஜய்க்கு ரொம்பவே பிடித்து இருந்ததால் ஒரு நல்ல நகைச்சுவை கலைஞனை இழந்துவிட்டோம் என்றெல்லாம் வருத்தத்துடன் அப்போது சொல்லி இருந்தாராம். விஜய் மட்டுமல்லாமல் பல நடிகர்களும் அந்த நேரத்தில் பாரியின் குடும்பத்திற்கு உதவி செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் காக்கா கோபால் குடும்பத்திற்கும் விஜய் மற்றும் அவரது தந்தை பல உதவிகள் செய்துள்ளார்களாம். அதே போல் தாடி பாலாஜி விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் விஜய் செய்த உதவியை பற்றி கூறியிருந்தார். தாடி பாலாஜி தந்தை உடல்நிலை சரியில்லாத போது தளபதி விஜய் அவரை மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். பல நடிகர்கள் உதவி செய்வதை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஆனால் விஜய் தன்னுடன் பணியாற்றிய சக நடிகர்களுக்கு பல உதவிகள் செய்துள்ளார். தற்போது அந்த நடிகர்களே விஜய் செய்த உதவியை சொல்வதால்தான் ரசிகர்களுக்கு தெரியவருகிறது. தல அஜித்தை போல் விலையும் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் சில உதவிகளை செய்து தான் வருகிறாராம்.