Cibi: "அஜித் சார் பர்சனால நிறைய பேசுனாரு" மனம் திறந்த பிக்பாஸ் புகழ் சிபி!
cibi : 'இடி மின்னல் காதல்' படத்தின் டிரைலர் லாஞ்சில் நடிகர் சிபி தன்னுடைய திரைப்பயணம் பற்றி பேசி இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சிபி. துணிவு, வஞ்சகர் உலகம், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அறிமுக இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி உடன் யாஸ்மின் பொன்னப்பா, பவ்யா தரிக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ' இடி மின்னல் காதல்'. இப்படம் வரும் மார்ச் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அப்படத்தின் டிரைலர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றதில் நடிகர் சிபி தன்னுடைய திரைப்பயணம் பற்றி பேசி இருந்தார்.
நண்பர்களுடன் இணைந்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் ஷார்ட் பிலிம் ஒன்றை எடுத்தோம். அது தான் என்னை இந்த இடம் வரை கொண்டு வந்து இருக்கு. இதற்கு நான் பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அது அனைத்திற்கும் மேல் எனக்கு நானே நன்றி சொல்லி கொள்ள வேண்டும். எனக்கு என் மேல் இருந்த நம்பிக்கை தான் காரணம்.
என்ன தான் வேலையில் பிஸியாக இருந்தாலும் நம்முடைய மெண்டல் ஹெல்த்துக்காக கொஞ்ச நாள் எடுத்துக்கணும். நமக்கு பல கவலைகள், ஏமாற்றங்கள், தோல்விகள் இப்படி பலவற்றை எதிர்கொண்டு இருப்போம். அதில் இருந்து வெளி வர மெண்டல் ஹெல்த் மிகவும் முக்கியம். இப்படம் அதை பற்றி பேசும் ஒரு படம். இந்த படத்தில் ஹீரோ ஹீரோயின் கான்செப்ட் இல்லவே இல்லை. இது ஆறு கதாபாத்திரங்களை சுற்றிலும் நகரும் ஒரு கதை. அதில் நான் ஒரு கதாபாத்திரம் தான்.
ஏமாற்றமே மிஞ்சும்:
பிக் பாஸ் புகழ் தற்காலிகமான ஒன்று தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியில் வரும் போது 1000 கேமராக்கள் என்னை சுற்றி இருந்தது. அது அப்படியே படிப்படியாக குறைந்தது. நான் செய்யும் வேலையை பொறுத்தது தான் எனக்கு அந்த புகழ் அமையும். அது எனக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் போவதற்கு முன்பே தெரியும். அந்த மைண்ட் சேட்டோடு தான் உள்ளே போனேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தவுடன் 10 இயக்குநர்கள் வந்து வாய்ப்பு கொடுப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. இப்படி நினைத்து கொண்டு உள்ளே போனால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.
துணிவு படத்தில் நடிகர் அஜித் சார் கூட ஒர்க் பண்ணும் போது அவரோட பர்சனலா பேச நிறையா வாய்ப்பு கிடைச்சுது. அவர் கடந்து வந்த பாதை, அவர் பட்ட அவமானங்கள் இப்படி நிறைய விஷயம் பத்தி பர்சனலா பேசுனாரு. நான் கூட எதுக்கு இவ்வளவு பர்சனல் விஷயம் எல்லாம் நம்மளோட ஷேர் பண்றாரு என யோசிச்சேன். அவர் இப்போ சக்சஸ் ஆயிட்டாரு. இங்க இருக்க பலரை கேட்டாலும் அவங்க எல்லாருமே கஷ்டப்பட்டு தான் சக்சஸ் ஆயிருப்பாங்க. அப்படி சக்சஸ் ஆனவங்க அதை பத்தி நம்மகிட்ட சொல்லும் போது நாமளும் சக்சஸ் ஆகிடலாம் என நம்பிக்கை வரும் என பேசி இருந்தார் நடிகர் சிபி.