(Source: ECI/ABP News/ABP Majha)
Oppenheimer: இந்தியாவில் வசூலைக் குவிக்கும் ஹாலிவுட் படங்கள்...3ஆவது நாளாக பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கும் ஓப்பன்ஹெய்மர்!
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் மூன்றாவது நாளாக திரையரங்குகளில் வசூலைக் குவித்து வருகிறது.
ஓப்பன்ஹெய்மர்
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கி, கிலியன் மர்ஃபி, எமிலி ப்ளண்ட், ராபர்ட் டெளனி ஜூனியர், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பியூ முதலியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். லுட்விக் கோரான்ஸன் இசையமைத்து ஹோய்டே வான் ஹோய்டெமா ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்று மூன்றாவது நாளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் எவ்வளவு வசூல் ஈட்டியுள்ளது என்று பார்க்கலாம்!
கதைச்சுருக்கம்
புலிட்சர் விருது பெற்ற ‘American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer’ எனும் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ஓப்பன்ஹெய்மர். இயற்பியல் விஞ்ஞானியான ஓப்பன்ஹெய்மர், ஹிட்லரின் நாஜிப்படையை தோற்கடிக்க அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
அவரது கண்டுபிடிப்பு ஏற்படுத்தும் பேரழிவுகளைக் கண்டு கடும் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி அணு ஆயுதத்துக்கு எதிராக பேசத் தொடங்குவதால், அவரை கம்யூனிஸ ஆதரவாளராகக் கருதி அவர் மீது விசாரணை நடத்துகிறது அவரது நாடான அமெரிக்கா. ஆக்கும் சக்தியாக இருந்த அறிவியல் அழிக்கும் சக்தியாக மாறிய இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தின் அரசியலை பேசும் படமாக அமைந்திருக்கிறது ஓப்பன்ஹெய்மர் படம்.
பலத்த வரவேற்பு
உலகம் முழுவதும் இந்தப் படத்துக்கு இதுவரை இல்லாத அளவிற்கான வரவேற்பு இருந்து வந்தது. மேற்கு நாடுகளில் மட்டுமில்லாமல் இந்தியாவில் ஓப்பன்ஹெய்மர் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியாவதற்கு முன்பாக மொத்தம் 3 லட்சம் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் நேற்று வெளியான ஓப்பன்ஹெய்மர் உலக அளவில் மற்றும் இந்திய அளவில் எவ்வளவு வசூல் செய்தது என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல் நாள் வசூல
ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 29 மில்லியன் டாலர்களும் இந்தியாவில் 13.50 கோடியும் வசூல் செய்துள்ளது.
இரண்டாவது நாள் வசூல்
நேற்று இரண்டாவது நாளாக இந்திய அளவில் 17 .25 கோடிகளை வசூல் செய்து இரண்டு நாட்களில் 31. 75 கோடிகளை சேர்த்தது.
மூன்றாவது நாள் வசூல்
இன்று மூன்றாவது நாளாக பெரும்பாலான காட்சிகள் முழுவதும் நிரம்பியுள்ள நிலையில் இந்தியாவில் 17.50 கோடிகளை படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓப்பன்ஹெய்மரை பின்னுக்கு தள்ளிய பார்பி
ஓப்பன்ஹெய்மர் படம் வெளியாகிய அதே நாளில் உலகம் முழுவதும் வெளியான மற்றொரு திரைப்படம் கிரெட்டா கெர்விக் இயக்கிய பார்பி திரைப்படம். இந்த இரண்டு படங்களில் வசூலைப் பொறுத்தவரை பார்பி படமே அதிக வசூலை ஈட்டியுள்ளது. முதல் நாளில் மட்டுமே 66 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது பார்பி.
இந்தியாவில் கொடிகட்டி பறக்கும் ஓப்பன்ஹெய்மர்
மற்ற நாடுகளில் பார்பி படம் முன்னிலையில் இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் ஓப்பன்ஹெய்மர் படம் வசூலில் முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவில் 13.50 கோடிகளை ஓப்பன்ஹெய்மர் வசூல் செய்துள்ள நிலையில், பார்பி திரைப்படம் 4.50 கோடி வசூல் செய்தது. இந்தத் தகவல் இந்தியாவில் கிறிஸ்டோஃபர் நோலனின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பைக் காட்டுகிறது.