Thangalaan Update: விக்ரமின் அபார உழைப்பு.. ஜனவரியில் வரும் தங்கலான்... வாவ் அப்டேட் தந்த பிரபலம்!
Thangalaan update: ஜனவரி மாதம் நிச்சயமாக வெளியாக உள்ளது தங்கலான் திரைப்படம். விரைவில் அதிகாரப்பூர்வமான தேதி வெளியாகும் எனத் தகவல்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்' (Thangalaan). பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜூன் பிரபாகரன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளார்.
நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள தங்கலான் திரைப்படம் ஜனவரி மாதத்தில் உறுதியாக வெளியாகும் என்றும், விரைவில் அதன் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தங்கலான் படம் குறித்து வியப்பூட்டும் சில தகவல்களை பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன். அதன்படி, சர்வதேச நிறுவனம் ஒன்றுடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தைகள் மும்மரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தங்கலான் திரைப்படத்துக்கு முதலில் 'தங்கம்' என்ற டைட்டில் முன்னதாக வைக்கப்பட்டது.
தங்கலான் படத்தின் டீசர் சிலிர்ப்பூட்டும் காட்சிகளுடன் உருவாகியுள்ளது. அது விரைவில் வெளியிடப்படும். பொதுவாகவே ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல என அசராமல் ரிஸ்க் எடுக்கும் சீயான் விக்ரம், இப்படத்துக்காக கடினமாக உழைத்து தன்னுடைய நடிப்பை மென்மேலும் மேம்படுத்தியுள்ளார் என அவர் கூறியுள்ளார். இந்தத் தகவல்கள் விக்ரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மேலும் எகிறவைத்துள்ளன.
தங்கலான் படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருந்தார்.
"இந்த கதையை முதலில் எனக்கு கொடுக்கும் போது தங்கம் என்ற பெயரில் தான் கொடுத்தார்கள். படிக்கும் போதே மிகவும் பிடித்து போனது. எப்படி இப்படி பட்ட ஒரு கதையை உருவாக்கினார்கள் என திகைத்து போனேன். 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். அப்படத்தில் ஒரு உயிர் இருந்தது. நம்மால் ஈஸியாக கனெக்ட் செய்ய கூடிய ஒரு கதையாக இருந்தது. அதே போன்ற ஒரு கதையை நம்முடைய கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாக்கியுள்ளனர்.
இப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்றை படைக்கும் என அப்போதே எங்களுக்கு தோன்றியது. மேலும் படத்தின் மேக்கிங் பார்க்கும் போது இன்னும் வியப்பாக இருந்துது. படப்பிடிப்பு முன்னர் முடிவு செய்த நாட்களை விட அதிகமானது. கிட்டத்தட்ட 120 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அதற்கு மேலும் சில பேட்ச் அப் ஒர்க் நடைபெற்றது. எடிட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு படம் அட்டகாசமாக வந்துள்ளது.
தங்கலான் படத்தை சர்வதேச அளவில் கொண்டு சேர்ப்பதற்காக மிக பெரிய ஒரு மீடியா நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வெளியிட திட்டமிடப்படுகிறது. இது குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அந்த அளவிற்கு தங்கலான் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
தங்கலான் படத்தின் பத்து நிமிஷ டீஸரை பார்த்த போது அந்த ஒட்டுமொத்த டீமும் ஆச்சரியப்பட்டது. ஹாலிவுட் சினிமாவை பார்த்தது போல மிரட்டலாக இருந்தது. நடிகர் விக்ரமின் உழைப்பு ஒவ்வொரு சீனிலும் மிகவும் அதிகமாக அதே எனர்ஜியோடும் இருந்தார். நடிப்புகவே பிறந்த மனிதர். அந்த கேரக்டரின் பங்களிப்பு எந்த இடத்திலும் குறைந்துவிட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தது. நிச்சயம் விக்ரம் திரைப்பயணத்தில் இது ஒரு பெஞ்ச்மார்க் திரைப்படமாக அமையும்.
ஜனவரி மாதம் படம் கண்டிப்பாக வெளியாகும். எந்த தேதி என்ற அறிவிப்பு விரைவில் வரும். நடிப்பு, ஆக்ஷன், பெரிய லெவலில் மியூசிக் என எல்லாமே ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு இணையாக தங்கலான் படத்திலும் நிச்சயம் இருக்கும். ஜி.வி. பிரகாஷ் புது மாதிரி ஒரு இசையை இப்படத்திற்கு கொடுத்துள்ளார். பின்னணி இசையும் சர்வதேச அளவில் இருக்கும். பாக்ஸ் ஆபிசில் நிச்சயம் ஒரு வெற்றி படமாக தங்கலான் படம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார் தனஞ்ஜெயன்.