சென்னையின் அனைத்து வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கும் ஓடி, ஓடி உதவி செய்யும் பாலா!
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு உதவி வரும் சின்னத்திரை பிரபலம் பாலாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஒரு பாதிப்பில் மக்கள் பக்கம் நிற்பவனே உண்மையான கலைஞன், தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் உதவும் குணத்தால் மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். தன் மொத்தக் கையிருப்பையும் திரட்டி, சென்னை வெள்ளபாதிப்பில் அவர் செய்து வரும் உதவிகளை, பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ஓடி, ஓடி உதவி செய்யும் பாலா:
விஜய் டிவி ( கலக்க போவது யாரு) நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாலா தற்போது தன் உதவும் கரங்களால் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார். மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கித்தந்தது, ஏழ்மையான குழந்தைகளை படிக்க வைப்பது என, திரையில் பணியாற்றி அதில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, உதவி தேவைப்படும் பலருக்கு இது போல் உதவி செய்து வருகிறார்.
இந்த சென்னை வெள்ளத்தில் அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் , அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ( 1000 ) ரூபாய் வீதம் - 200 குடும்பங்களுக்கு மொத்தமாக 2,00,000 ( இரண்டு லட்சம் ) உதவித் தொகை வழங்கினார்.
600 கிலோ அரிசி உதவி:
பின்னர் தான் அவசர தேவைக்காக சீட்டு போட்டு வைத்திருந்த 3 லட்ச ரூபாய் மற்றும் தன்னால் முடிந்த பணத்தை திரட்டி, பணத்தை எடுத்து, பள்ளிக்கரனையில் உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ வீதம் 600 கிலோ அரிசி வாங்கி அளித்துள்ளார். அடுத்ததாக துரைப்பாக்கம் பல்லவன் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பெண்களுக்கு நைட்டி, ஆண்களுக்கு கைலி என வெள்ள நிவாரணம் அளித்துள்ளார்.
நரிக்குறவர் சமுதாய மக்கள், மழையால் பாதிக்கப்பட்ட சாலையோரம் வசிக்கும் மக்கள் என 140 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் மொத்தம் 1,40,000 ரூபாய் உதவித்தொகையுடன் ரூபாய் 1,60,000 மதிப்புள்ள நைட்டி, கைலி உட்பட வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார். பாலா இதுவரை சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மொத்தம் 5லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குவியும் பாராட்டு:
சென்னையின் பாதிப்பை சரி செய்யும் பணியில் இறங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியுடன் வெள்ள நிவாரணத்தை தன் மொத்தக் கையிருப்பையும் திரட்டி உதவி செய்து வரும் பாலாவின் முன்மாதிரியான செயல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
மேலும் படிக்க