'சந்திரமுகி' காட்சியை பயன்படுத்தியதற்கு ரூ.5 கோடி கேட்கப்பட்டதா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!
நடிகை நயன்தாரா அவரின் ஆவணப்படத்தில் பயன்படுத்திய சந்திரமுகி பட காட்சிக்காக 5 கோடி கேட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து சந்திரமுகி தயாரிப்பாளர் இதற்க்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படமான நயன்தாரா Nayanthara: Beyond the Fairytale ஆவணப்படத்தில், சந்திரமுகி பட தயாரிப்பாளர் மற்றும் ரஜினிகாந்தின் அனுமதி இன்றி சந்திரமுகி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பயன்படுத்தியதால் ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு தற்போது தயாரிப்பு நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான பல திரைப்படங்களின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக நயன் - விக்கி காதலிக்க பாலமாக அமைந்த 'நானும் ரவுடிதான்' படத்தின் 3 வினாடி காட்சியை பயன்படுத்தியதற்காக இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தனுஷ் சுமார் பத்து கோடி நஷ்ட ஈடு கோரி அனுப்பிய நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக நயன்தாராவும் மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி இருந்தார். இது தொடர்பான தனுஷ் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என நீதிமன்றம் கூறிய நிலையில், நயன்தாராவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில், நயன்தாரா தரப்பில் இருந்து இது படத்தில் இருந்து பயன்படுத்திய காட்சி இல்லை. தங்களின் சொந்த சேகரிப்பில் இருந்து பயன்படுத்தியதாக கூறினார். எனினும் முடிவை எட்டாத இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் இயக்குனரும் - பத்திரிகையாளருமான சித்ரா லக்ஷ்மன் youtube தளத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், நடிகை நயன்தாரா 'சந்திரமுகி' திரைப்படத்தில் இருந்து பயன்படுத்திய காட்சியால் தயாரிப்பு நிறுவனம் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாகவும், எனவே ஐந்து கோடி இழப்பீடு ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக கூறியிருந்தார்.
சமூக வலைதளத்தில் இந்த தகவல் தீயாக பரவிய நிலையில், தற்போது இதற்கு நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சார்பில் இருந்து, "சந்திரமுகி படத்தின் காட்சியை பயன்படுத்திக் கொள்வதில் எந்த ஒரு ஆட்சோபனையும் இல்லை. ஐந்து கோடி கேட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை என அறிவித்துள்ளது.