Parasakthi: பஞ்சாயத்தில் சிக்கிய பராசக்தி.. 23 இடத்துல வெட்டுனாதான் சர்டிபிகேட் - ரிலீஸ் ஆகுமா?
ஜனநாயகன் படத்திற்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காத நிலையில், பராசக்தி படத்திற்கும் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியதால் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, இவரது கடைசி படமான ஜனநாயகன் படம் நாளை வெளியாகவிருந்த நிலையில், தணிக்கைச் சான்று பெற இயலாத காரணத்தால் அந்த படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பஞ்சாயத்தில் சிக்கிய பராசக்தி:
இது இணையத்திலும், திரை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில், ஜனநாயகனுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள பராசக்தி படத்திற்கும் இதே நிலை உருவாகியுள்ளது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கும் தணிக்கைச் சான்றிதழ் இதுவரை கிடைக்கவில்லை.
23 இடங்களில் வெட்டு?
இந்த படத்தைப் பார்த்த மத்திய தணிக்கை குழு அதிகாரிகள் படத்தில் 23 இடங்களில் காட்சியை நீக்க பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சுதா கொங்கரா மற்றும் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏனென்றால், தணிக்கை வாரியம் கூறிய 23 இடங்களில் படத்தின் காட்சிகளை நீக்கினால் படத்தின் திரைக்கதை மற்றும் கதைக்களம் வலுவிழந்ததாக மாறிவிடும் என்று படக்குழு கவலை அடைந்துள்ளது.
இதனால், தணிக்கை குழுவிடம் படத்தை மீண்டும் பார்க்க படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பராசக்தி படத்திற்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் நெதர்லாந்து நாட்டில் பராசக்தி படத்திற்கான காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலீஸ் ஆகுமா பராசக்தி?
ஜனநாயகன் படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததே பெரும் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ள நிலையில், பராசக்தி படத்திற்கும் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காதது படக்குழுவை திரையரங்க உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், தமிழ்நாட்டில் அதிகளவு விடுமுறை கொண்ட பண்டிகையும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகை பொங்கல்.
வேதனையில் திரையரங்க உரிமையாளர்கள்:
பெரிய பட்ஜெட் படங்கள் எப்போதும் பொங்கலுக்கு ரிலீசாகவே ஆர்வம் காட்டும். ஏனென்றால், பெரியளவு வசூலை குவிக்க முடியும், திரையரங்கிற்கும் மக்கள் அதிகளவு வருவார்கள் என்பதே இதற்கு காரணம். ஏற்கனவே ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகாததால் திரையரங்க உரிமையாளர்கள் நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், பராசக்தி படமும் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகாவிட்டால் திரையரங்க உரிமையாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்திக்க இயலும் என்பதே உண்மை. சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி படத்தை டாவ்ன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் விநியோகிக்கிறது. தணிக்கைச் சான்றிதழ் சிக்கலை எதிர்கொண்டுள்ள பராசக்தி படததிற்கு நாளை மதியத்திற்குள் சான்றிதழ் கிடைத்துவிடும் என்று படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது.
பராசக்தி படம் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாகிய படம் என்பதால் இந்த படத்தில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சி, தமிழக அரசியல், அரசியல் வசனங்கள், மாணவர்கள் எழுச்சி போராட்டம் படம் முழுவதும் இடம்பெற்றிருக்கும். இதன் காரணமாகவே, தணிக்கை குழு பல இடங்களில் காட்சிகளை நீக்க பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது.





















