Regina, Nivedhitha : அது விருது விழா மட்டும் இல்லைங்க.. அது ஒரு பிசினஸ்.. ரெஜினா, நிவேதிதா ஜாலி பேட்டி..
ஆஹா ஓடிடியில் வெளியாகி சக்கைப்போடு போடும் சீரிஸ் ஆன்யாஸ் டுடோரியல்ஸ். இதில் என்ன சிறப்பம்சம் என்றால் எல்லாமே பெண் டெக்னீசியன்ஸ் கொண்டது இந்தத் தொடர்.
ஆஹா ஓடிடியில் வெளியாகி சக்கைப்போடு போடும் சீரிஸ் ஆன்யாஸ் டுடோரியல்ஸ். இதில் என்ன சிறப்பம்சம் என்றால் எல்லாமே பெண் டெக்னீசியன்ஸ் கொண்டது இந்தத் தொடர். இதில் நமக்கு ரொம்பவே பரிச்சியமான முகம் ரெஜினா கஸண்ட்ரா. அடுத்ததாக நிவேதிதா சதீஷ். இருவரும் சேர்ந்து அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு கலகல பேட்டி அளித்தனர். அதில் ரெஜினா பட்டாசு போல படபடவென பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியிலிருந்து..
ஆன்யாஸ் டுடோரியல்ஸ் படத்தில் நிறைய பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று பேசுகிறார்கள். நாங்கள் பேசு பொருளாகி இருப்பதில் மகிழ்ச்சி தான். ஆனால் அதே வேளையில் ஒரு ஆண் இயக்குநராக, கேமரா மேனாக இருக்கும்போது அதைக் குறிப்பிட்டுச் சொல்வதில்லை இந்த சமூகம். ஆனால் பெண்களை மட்டும் ஏன் அப்படிக் கூறுகின்றனர். அதுதான் எனக்கு ஏற்க முடியவில்லை. மற்றபடி இந்தப் படத்தில் பணி செய்தது எனக்கு மிகுந்த நிறைவைத் தந்தது என்றார்.
அதே போல் நிவேதிதா சதீஷ் பேசுகையில், நான் இந்தப் படத்தோடு கதையை 2020ல் கேட்டேன். அப்புறம் 2021ல் நான் ஹிமாச்சலில் இருந்தபோது படம் முடிவானதை தெரிவித்தார்கள். படம் முடியும்வரை எனக்கு நிறைய புதுப்புது அனுபவங்கள் கிடைத்துள்ளது. எனக்கு நடிப்பு வெளியில் பெரிய ஸ்கோப் கிடைத்தது என்று கூறினார்.
ஆன்யாஸ் டுடோரியல் கதை என்ன?
தாய், தமக்கையுடன் ஏற்படும் பிணக்கு காரணமாகத் தனிக்குடித்தனம் செல்கிறாள் லாவண்யா. ஆளரவமற்ற பகுதியில், அமானுஷ்ய பேக்கிரவுண்ட் கொண்ட வீட்டில் தனியாகத் தங்குகிறாள். சமூக வலைத்தளத்தில் தன்னைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமாகக் கிடைக்கும் ஒப்பனைக் கலை சார்ந்த விளம்பர வருவாயை நம்பியிருக்கிறாள். ஆனால் ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ என்கிற லாவண்யாவின் சமூக ஊடகப் பக்கம் சோபையிழந்திருக்கிறது.
அமானுஷ்யம் மண்டிய அந்த வீட்டின் பின்னணியைப் பயன்படுத்தி சமூக ஊடகத்தில் பின்தொடர்வோரின் எண்ணிக்கையை உயர்த்தத் திட்டமிடுகிறாள். வீட்டில் பேய் இருப்பதாய் அவள் கிளப்பிய உத்தியால் அதுவரை ஈயடித்த அவளது பக்கம் டிரெண்டிங்கில் முந்துகிறது. ஆனால் உண்மையிலேயே அமானுஷயத்தை எதிர்கொள்கிறாள் லாவண்யா. பின்பு நடப்பது தான் கதை. முதல் சீரிஸ் முடிந்துவிட்டது. சில தொய்வுகள் இருந்தாலும் சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் ரெஜினா, நிவேதிதா சதீஷ் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கேன்ஸ் விழா பற்றி பேசிய ரெஜினா, "நாங்க ரீசண்டா கேன்ஸ் போயிருந்தோம். மூணு பேர் போயிருந்தோம், ராக்கெட்டரி படத்துக்காக ஒரே ஒரு க்ரில் சிக்கன், ஒரு கனவா, ஒரு கிளாஸ் வைன், ஒரு கிளாஸ் விஸ்கி மட்டும் தான் சாப்பிட்டோம். பில் கொடுத்தாங்க காச பே பண்ணினோம். ஆனால் யுரோல பே பண்ணோம். அப்புறம் தான் பேங் ஸ்டேட்மென்ட் பார்த்தால் இருபதாயிரம் ரூபாய் எடுத்துருக்குறதா தெரிய வந்தது. கேன்ஸ் ஒரு பிசினஸ் பண்ற இடம்தாங்க, எக்சிபிஷன் போனா எப்படி க்யூபிக்கல்ஸ விப்பாங்களோ அது மாதிரி அங்க வர்றவங்க படங்களை பிசினஸ் பண்ணுவாங்க அவ்வளவுதான் என்று கூறினார்.