Film Festival History - 3 | ’விழா நடைபெறாமலேயே தொடங்கிய கேன்ஸ்’ திரைப்பட விழாக்களின் கதை - 3 !
உலகின் Big 3 திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா பொருளாதார நெருக்கடிகளால் இரண்டு முறை நிறுத்தப்பட்டது என்பது வரலாறு
கேன்ஸ் முதல் திரைப்பட விழாவே நடக்கவில்லை!
1939-ல் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடக்க விழா நடைபெற்ற இரவு கொண்டாட்டங்கள் எல்லாம் கலைகட்டின. கொண்டாட்டங்கள் முடிந்த மறுநாள் ஜெர்மனியின் நாஜிப்படைகள் போலந்து நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததன் விளைவாக கேன்ஸில் நடைபெறவிருந்த சர்வதேச திரைப்பட விழா பத்து நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் நாஜி படைகளின் அத்துமீறலை எதிர்த்து செப்டம்பர் 3-ம் தேதி பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் அரசுகள் போரை அறிவித்தால், அது இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்தது. அதனால், கேன்ஸ் நகரில் நடைபெறவிருந்த முதல் சர்வதேச திரைப்பட விழா நடைபெறாமலேயே ரத்து செய்யப்பட்டது.
7 ஆண்டுகளுக்கு பிறகே நடந்த கேன்ஸ் திரைப்படவிழா
இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய சூழலில், 1946-ல் செப்டம்பர் இறுதியில் முதல் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸின் கேன்ஸ் நகரில் ஒருவழியாக நடைபெற்றது. 21 நாடுகள் தங்கள் நாட்டு திரைப்படங்களை கலந்து கொள்ளச் செய்தனர். ஆனால் அதன் பின்னர், சில பொருளாதார பிரச்னைகளின் காரணமாக 1948 மற்றும் 1950-ல் இவ்விழாவானது நடைபெறவில்லை. இவ்வாறு பல இடர்பாடுகளை சந்தித்த சர்வதேச திரைப்படவிழா, 2002-லிருந்து கேன்ஸ் விழா என பெயர் மாற்றம் பெற்றது. இன்றளவிலும் அவ்வாறே நடைபெற்று வருகிறது.
ஆகச்சிறந்த திரைப்படவிழா சந்தித்த பொருளாதார சிக்கல்
உலகின் Big 3 திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா பொருளாதார நெருக்கடிகளால் இரண்டு முறை நிறுத்தப்பட்டது என்பது வரலாறு. அது மீண்டும் நிகழ்ந்துவிடக் கூடாது எனக் கருதிய ஏற்பாட்டாளர்கள். திரைப்பட விழாவில் திரைப்பட வியாபாரம் குறித்த கருத்தரங்குகள், திரைப்பட வியாபாரங்கள் ஆகியவை விழா நடைபெறும் காலங்களில் அங்கே நிகழ ஒருங்கிணைக்கப்படுகின்றன. பின்னர், சர்வதேச திரை ஜாம்பவான்களை கொண்டு இன்றளவிலும் திரைப்படங்கள் குறித்த விவாதங்கள், உரையாடல்களைக் கொண்ட பயிற்சி பட்டறைகள் விழாக்காலத்தில் ஒருங்கிணைக்கடுகின்றன.
உலகில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் விளைவாக, இத்தாலிய திரைப்பட விழாவான வெனீஸ் திரைப்பட விழாவும் கேன்ஸ் திரைப்பட விழாவும் ஒரே காலக்கட்டத்தில் நடைபெறும் சூழலை தவிர்க்கும் பொருட்டு கேன்ஸ் திரைப்பட விழா மே மாதங்களில் நடைபெறும் படி மாற்றி அமைக்கப்பட்டது. இன்றளவிலும் மே மாதத்திலேயே இவ்விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படியாக உலக சினிமா பொருளாதாரத்திலும் அங்கு திரையிடப்படும் திரைப்படங்களின் கலை சார்ந்த அழகியல் கூறுகளினாலும் உலகில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் முதன்மையானதாக திகழ்கிறது.
சிறப்பம்சங்கள் என்ன?
கேன்ஸ் திரைப்பட விழாவானது பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. போட்டிப் பிரிவில் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டின் அதிசிறந்ததாக கருதும் திரைப்படங்களை கலந்து கொள்ளச் செய்து தங்கள் நாட்டிற்கு கேன்ஸ் மூலமாக சர்வதேச அங்கீகாரத்தை பெற எத்தனிக்கின்றன. போட்டிப் பிரிவில் கலந்து கொண்டு சிறந்த படங்களாக தேர்வு செய்யப்படும் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்விருதுகள் சர்வதேச திரைத்துறையினர் மத்தியில் மிக உயரிய விருதாக கருதப்பட்டு சர்வதேச அங்கீகாரமும் பெறுகின்றன. விழா நடைபெறும் அரங்கில் பங்கேற்பதற்காக வரும் சர்வதேச திரைப் பிரபலங்கள் விழா அரங்கிற்கு முன்பாக விரிக்கப்படும் சிவப்பு கம்பளத்தில் நடை போடுவதும் கூட மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. பலத்த போட்டிகளுக்கிடையே தான் சிவப்பு கம்பள நிகழ்வு நடத்தப்படுகிறது. கேன்ஸ் திரைப்படவிழாவில் விருது பெறுவது மட்டுமின்றி, அந்நிகழ்வில் பங்கேற்பதையே, திரைவாழ்வில் தாங்கள் பெற்ற உயரிய அங்கீகாரமாக கருதுகிறார்கள்.
போட்டியின்றியும் தேர்வாகும் படைப்புகள்
கேன்ஸ் விழாவில் போட்டி பிரிவு மட்டுமல்லாமல் போட்டியின்றி நடைபெறும் திரையிடல், சிறப்பு திரையிடல்கள், குறும்பட போட்டி திரையிடல்கள், ஆவணப்பட திரையிடல்களும் நடைபெறுகின்றன. அப்படியாக இங்கு திரையிடப்படும் திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி அங்கீகாரம் வழங்கப்படுகிறது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த ஆவணப்படம், சிறந்த குறும்படம், ஜூரிக்கள் வழங்கும் சிறப்பு விருது போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன. அது மட்டுமின்றி, விழாவில் திரையிடப்பட்ட அத்தனை திரைப்பபடங்கள், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களுக்கும் விழா நிர்வாகமே திரைப்பட வியாபாரங்களை நடத்திக்கொள்வதற்கான திரைப்பட வியாபார சந்தையை அங்கேயே சிறப்பு ஏற்பாடாக செய்து வியாபாரங்கள் சர்வதேச அளவில் நடைபெற வழிவகை செய்கிறார்கள்.
முதன்மை விருது தேர்வுக் குழுவில் தீபிகா படுகோன்
நடப்பாண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விருதுகள் வருகின்ற மே 17-ம் தேதியிலிருந்து மே 28 வரை நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் போட்டிப் பிரிவின் முதன்மை பிரிவான palme d’Or ( Golden palm ) விருதினை வழங்கும் நடுவர் குழுவில் இந்திய திரைப்பட நடிகை தீபிகா படுகோன் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Palme d’Or போட்டிப்பிரிவில் இந்த ஆண்டு அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ், தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 21 படங்கள் பங்குபெறுகின்றன. Uncertain regard பிரிவில் ஜப்பான், பாலஸ்த்தீன், துனிசியா, போலந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கட்டமைப்பிலும் கதை அமைப்பிலும் உருவாக்கத்திலும் புதிய உத்திகளை கொண்ட 20 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. பல்வேறு தலைப்புகளின் கீழ் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், ஆவணப்படங்களும், குறும்படங்களும், கேன்ஸ் கிளாஸிக் திரைப்படங்களும், சில வெப் சீரிஸ்களும் திரையிடப்பட உள்ளன.
கேன்ஸ்-லும் ரஷ்ய-உக்ரைன் போர் எதிரொலி
2022 கேன்ஸ் விழாவில் உக்ரைன் – ரஷ்ய போர் சார்ந்த சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதத்திலேயே உக்ரைன் மீது ரஷ்யா தொடுக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தது கேன்ஸ் குழு. ரஷ்யாவின் அத்துமீறலை கண்டிக்கும் விதமாக ரஷ்ய அரசு நிர்வாகத்தோடு தொடர்பில் உள்ள மற்றும் போரைக் கண்டிக்காத ரஷ்ய திரைப்பிரபலங்களுக்கும் அவர்களின் திரைப்படங்களும் அனுமதி இல்லை என அறிவித்துள்ளது கேன்ஸ் விழாக் குழு. மேலும், உக்ரைனில் ஆபத்திற்குள்ளாகி இருக்கும் நடிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்காக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளது கேன்ஸ் குழு. அது மட்டுமின்றி, ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்த ரஷ்யர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கவும் தவறவில்லை.