Satish Kaushik: இந்தி ’சேது’ பட இயக்குநர், பிரபல நடிகர் மறைவு... கண்ணீர் வெள்ளத்தில் பாலிவுட் திரையுலகம்!
பாலா இயக்கிய சேது படத்தை இந்தியில் ’தேரே நாம்’ எனும் பெயரில் ரீமேக் செய்தார். சல்மான் கான், பூமிகா நடிப்பில் வெளியான இந்தப் படம் பாலிவுட்டிலும் கவனமீர்த்து வெற்றி பெற்றது.
90ஸ் கிட்ஸின் விருப்ப நடிகராக வலம் வந்த பிரபல நடிகர், இயக்குநர் சதீஷ் கௌஷிக் உயிரிழந்தது பாலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீதேவி - அனில் கபூர் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த்த மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட பங்களின் மூலம் பாலிவுட் ரசிகர்களை ஈர்த்து 90களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சதீஷ் கௌஷிக்.
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள சதீஷ் கௌஷிக், பிரபல இயக்குநராகவும் வலம் வந்துள்ளார்.
ஸ்ரீதேவியை வைத்து தன் முதல் படமான ரூப் கி ராணி சோரன் கா ராஜா எனும் படத்தை இயக்கினார்.
தொடர்ந்து தயாரிப்பாளராகவும் வலம் வரத் தொடங்கிய சதீஷ் கௌஷிக் பாலா இயக்கிய சேது படத்தை இந்தியில் ’தேரே நாம்’ எனும் பெயரில் ரீமேக் செய்தார். சல்மான் கான், பூமிகா நடிப்பில் வெளியான இந்தப் படம் பாலிவுட்டிலும் கவனமீர்த்து வெற்றி பெற்ற நிலையில், ஐஃபா, ஃபில்ம் ஃபேர் விருதுகளில் சிறத இயக்குநருக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 90 படங்களில் நடித்துள்ள சதீஷ் கௌஷிக், 13 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், தன் 66ஆவது வயதில் நேற்றிரவு (மார்ச்.08) உயிரிழந்தார்.
இவரது இழப்பால் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ள பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
சதீஷ் கௌஷிக்கின் நெருங்கிய நண்பரும் பாலிவுட்டின் பிரபல நடிகருமான அனுபம் கெர் சதீஷின் இறப்பு குறித்து திரையுலகினருக்கு அறிவித்து முன்னதாகப் பதிவிட்டுள்ளார்.
“மரணமே இவ்வுலகின் இறுதி உண்மை என்பதை நான் அறிவேன்! ஆனால் என் சிறந்த நண்பனைப் பற்றி ஒரு நாள் எழுதுவேன் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை. 45 ஆண்டு நட்புக்கு இப்படி ஒரு திடீர் முற்றுப்புள்ளி! நீங்கள் இல்லாமல் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது சதீஷ்!” என அனுபம் கெர் தன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
கங்கனா ரனாவத் இயக்கி நடித்து முடித்துள்ள ‘எமெர்ஜென்சி’ படத்தில் இறுதியாக சதீஷ் நடித்துள்ள நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவித்து கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார். "இந்த மோசமான செய்தியுடன் தான் கண் விழித்துள்ளேன். அவர் எனது மிகப்பெரிய சியர் லீடர். மிகவும் வெற்றிகரமான நடிகரும் இயக்குநருமான சதீஷ் கௌசிக் தனிப்பட்ட முறையில் மிகவும் அன்பான மற்றும் உண்மையான மனிதர். எமர்ஜென்சியில் அவரை இயக்குவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்று கங்கனா ட்வீட் செய்துள்ளார்.
சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும் வலம் வந்த சதீஷ், மேடை நாடகம், சினிமா, சின்னத்திரை என தான் நுழைந்த அத்தனை துறைகளிலும் வெற்றிகரமாக வலம் வந்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் சதீஷ் கௌஷிக்குக்கு தொடர்ந்து பாலிவுட் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.