17 Years of Em Magan: "எம்டன் வந்துட்டாராம்டா” .. நெகிழ வைத்த தந்தை - மகன் பாசம்.. 17 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘எம் மகன்’ ..!
இப்படத்துக்கு முதலில் எம்டன் மகன் என்று பெயரிடப்பட்டது. பின்னர் தமிழ்நாடு அரசு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு வழங்கப்படும் என தெரிவித்ததால் எம் மகன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நடிகர் பரத் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற “எம் மகன்” படம் ரிலீசாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைகிறது.
சினிமாவுக்கு வந்த சீரியல் இயக்குநர்
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மெட்டி ஒலி சீரியல் என்பது அவ்வளவு எளிதில் மறக்க முடியாதது. அந்த தொடரில் கோபி என்னும் கேரக்டரில் நடித்த அதன் இயக்குநர் திருமுருகன், இன்று வரை மெட்டி ஒலி கோபி என்று தான் அழைக்கப்படுகிறார். சின்னத்திரையில் வெற்றி பெற்ற திருமுருகனை வெள்ளித்திரை வரவேற்க, முதல் படமாக “எம் மகன்” வெளியானது.
இப்படத்தில் பரத், கோபிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன், வடிவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த இப்படத்துக்கு முதலில் எம்டன் மகன் என்று பெயரிடப்பட்டது. பின்னர் தமிழ்நாடு அரசு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு வழங்கப்படும் என தெரிவித்ததால் எம் மகன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தந்தை - மகன் உறவை சொல்லும் வித்தியாசமான படம்
தமிழ் சினிமாவில் தந்தை - மகன் இடையே இருக்கும் உறவு குறித்து ஏகப்பட்ட படங்கள் வந்து விட்டது. அதெல்லாம் ஒரே பேட்டர்னில் இருக்கும் நிலையில் எம் மகன் மட்டும் தனித்து தெரிய காரணம் அதிலிருந்த ரியாலிட்டி தான். உண்மையில் நம்முடைய வீடுகளில் அப்பா - மகன் இடையேயான உறவுகளில் பெரும்பாலான நேரங்களில் அன்பு, பாசம் என்பது மறைமுகமாகவே தான் இருக்கும். அதுதான் உண்மையும் கூட. இது அப்படியே எம் மகன் படத்தில் இடம் பெற்றது.
பாசத்தை மறைத்துக் கொண்டு எப்போது கண்டிப்புடன் இருக்கும் அப்பா, பாசத்துக்காக ஏங்கும் மகன் என படம் முழுக்க நம்மை திரையில் பார்ப்பது போலவே இருக்கும்.
நடிப்பில் போட்டி போட்டி நடித்த பிரபலங்கள்
'எம் மகன்' படத்தின் நடிகர்கள் ஒவ்வொருவரும் போட்டிபோட்டு கொண்டு சிறப்பாக நடித்தனர் என சொல்லும் அளவுக்கு பெர்பார்மன்ஸ் இருந்தது. கண்டிப்பான தந்தையாக வரும் நாசர் கடைசி காட்சியில் படம் பார்ப்பவர்களை நெகிழ வைத்து விடுவார். தந்தையை எம்டன் என மகன் அழைப்பது அழகாகவே இருந்தது. இப்படத்துக்கு பிறகு பல பேரின் அப்பா பெயர் எம்டன் என செல்லமாக மாறியது. சரண்யா, கோபிகா, வடிவேலு என அனைவரும் தங்கள் கேரக்டர்களை உணர்ந்து அசத்தியிருப்பார்கள்.
பலமாக அமைந்த வடிவேலு காமெடி
வடிவேலு காமெடி இப்படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது. மாமா நாசரிடம் மல்லுக்கு நிற்கும் மச்சான் கேரக்டரில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். தனக்கு சொல்லாமல் இறந்த தன் அப்பாவை எரித்து விட்டார்கள் என சுடுகாட்டில் அவர் செய்யும் அட்ராசிட்டி எல்லாம் என்றைக்கும் மறக்க முடியாது.
படத்தில் பரத் - கோபிகா காதல் மிகவும் அழகாக, எந்த வித ரசிகர்களின் முக சுழிப்புக்கும் ஆளாகாமல் அழகாக படமாக்கப்பட்டிருக்கும். இந்த படம் இன்றும் டிவியில் ஒளிபரப்பினால் டைட்டில் முதல் கிளைமேக்ஸ் வரை நகராமல் பார்ப்பவர்கள் ஏராளம். இந்த படத்தின் வெற்றியால் திருமுருகன் - பரத் இருவரும் மீண்டும் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தில் இணைந்தனர். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
மொத்தத்தில் அலப்பறை இல்லாத குடும்ப படம் என்பதற்கு “எம் மகன்” மிகப்பெரிய உதாரணம்..!