Bakasuran: பகாசூரன் பாருங்கள் என அஜித் சொன்னாரா...? இணையத்தில் ட்ரோல் செய்யப்படும் போஸ்டர்!
அஜித் பகாசூரன் படம் பார்த்து உண்மையாகவே பாராட்டினாரா எனத் தெரியாத நிலையில், இந்தப் போஸ்டர் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியும் ட்ரோல் செய்யப்பட்டும் வருகின்றன.
பகாசூரன் படம் ஒவ்வொரு தந்தையும் பார்க்க வேண்டிய படம் என அஜித் கூறியதாக சிவகாசியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.ஜியின் நான்காவது படமாக வெளியாகியுள்ள படம் பகாசூரன்.
ஜி.எம்.பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிப்பில் ‘பகாசூரன்’ படம் சென்ற பிப். 17ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஒருபுறம் பகாசூரன் குடும்ப ஆடியன்சை ஈர்ப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மோகன் ஜி படங்களுக்கு வழக்கம்போல் வரும் எதிர்ப்புகள் போலவே பகாசூரன் படத்துக்கும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், பகாசூரன் படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி எனவும், “மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தையும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய திரைப்படம் பகாசூரன். இந்திய சினிமாவின் மிக முக்கியமான படம் இது” என அஜித் கூறியதாகவும் தெரிவித்து சிவகாசியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
முன்னதாக நடிகர் அஜித்தை தான் சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொள்ள கூட முடியவில்லை என இயக்குநர் மோகன். ஜி பகாசூரன் பட ப்ரோமோஷன் பணிகளின்போது கூறியிருந்தார். தற்போது நடிகர் அஜித் பகாசூரன் படம் பார்த்து உண்மையாகவே பாராட்டினாரா எனத் தெரியாத நிலையில், இந்தப் போஸ்டர் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியும் ட்ரோல் செய்யப்பட்டும் வருகின்றன.
முன்னதாக இயக்குநர் அமீர் மோகன் ஜி மீதும் பகாசூரன் படம் மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்ததுடன், வட இந்தியா போல் தமிழ்நாட்டிலும் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கப்பார்க்கிறார்கள் எனக் கூறியிருந்தார். மேலும், அண்ணாமலை,ஹெச்.ராஜா போன்றோர் மோகன்.ஜி படங்களை பார்த்து கருத்து சொல்வதாகவும், ரஞ்சித், வெற்றிமாறன் படங்களைப் பார்த்து கருத்து சொல்வதில்லை என்றும் விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த மோகன்.ஜி தான் கடன் வாங்கிதான் படம் எடுத்ததாகவும், தன் படங்களை பாஜகவினர் உடன் தொடர்புப்படுத்தி பேசிய இயக்குநர் அமீர் ஒன்று தன் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும், இல்லையென்றால் மூன்று நாட்களுக்குள் தன் கருத்தினை பின்வாங்க வேண்டும் என சாடியிருந்தார்.
”பகாசூரன் 2ஆவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தைப் பற்றி பல நல்ல கருத்துக்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் அமீர் படம் பார்க்காமல் தப்பான கருத்தை சொல்கிறார். பகாசூரன் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போது இதுபோன்ற கருத்துக்களை கூற வேண்டாம். நான் எவரிடமும் பணம் வாங்கி படம் இயக்கவில்லை. வெளியே கடன் வாங்கியே படம் எடுத்துள்ளேன். நான் தான் தயாரிப்பாளர். எந்தக் கட்சியினரிடமும் பணம் வாங்கி நான் படம் எடுக்கவில்லை.
பகாசூரனை அனைவரையும் பார்க்கும்படிதான் நான் அழைக்கிறேன், தேவையின்றி படத்தை பார்க்காமல் தவறான கருத்துக்களை சொல்ல வேண்டாம்” எனப் பேசினார்.