Baba Re-release: அரசியல் அறிவிப்பை வெளியிட்ட அதே நாளில் பாபா ட்ரெயிலரை ரிலீஸ் செய்த ரஜினி...! ரசிகர்கள் ஆச்சரியம்..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் ப்ரவேசமாக போவதாக 2020ம் ஆண்டு இந்த தினத்தில் தான் அறிவிப்பு வெளியிட்டார்.
தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் ஒரு வரலாற்றை படைத்தவர். ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்த இந்த கலைஞர் அரசியலில் இறங்கி மக்களுக்கு ஒரு நேர்மையான தலைவராய் இருக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் பேராசையாக இருந்தது.
பல முறை அரசியலில் வரப்போவது குறித்து கேட்டபோதெல்லாம் அமைதி காத்த சூப்பர் ஸ்டார் ஒரு நாள் அவரின் அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையான அறிவிப்பை விடுத்தார். அந்த நாள் தான் 2020ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதியான இன்று. அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
சலசலப்பை ஏற்படுத்திய ரஜினியின் அறிவிப்பு :
நவம்பர் 30, 2020 அன்று ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஆலோசனைக்கு பிறகு தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த தகவல் வெளியானதும் ராஜின் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு மிகவும் ஆவலாக காத்திருந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கம் மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த ட்வீட் படி டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு வெளியாகும். ஜனவரியில் கட்சி துவங்குவோம் என ஒரு பதிவை ட்வீட் செய்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.
"மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!!!". இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல... என ட்வீட் செய்து இருந்தார் சூப்பர் ஸ்டார்.
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
— Rajinikanth (@rajinikanth) December 3, 2020
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல 🤘🏻 pic.twitter.com/9tqdnIJEml
நிறைவேறாத ஆசை :
ரஜினியின் இந்த அறிவிப்பு வெளியானதும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக இருந்தன. ஆனால் எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதும் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வாபஸ் பெற்றார். ரஜினி ரசிகர்கள் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் போராட்டங்கள் எல்லாம் நடத்தினர். அத்துடன் ரஜினிகாந்த் அரசியலில் அடியெடுத்து வைப்பது முடிவிற்கு வந்தது. இருப்பினும் இன்றும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அவர் அரசியலில் வரவேண்டும் என்பது ஒரு நிறைவேறாத ஆசையாகவே உள்ளது.