Ayothi: நிறைய கதை கேட்டு இறுதியாக இதை செலக்ட் பண்ணேன்.. அயோத்தி கதை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்!
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்து பல கதைகள் கேட்டு இறுதியாக அயோத்தி படத்தின் கதையைத் தேர்வு செய்ததாக இயக்குநர் அ.மந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அயோத்தி படத்துக்காக எழுத்தாளர் எஸ்.ராவை சந்தித்து பல கதைகள் கேட்டு அதில் இந்தப் படத்தின் கதையை தேர்வு செய்ததாக இயக்குநர் அ.மந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில், அ.மந்திரமூர்த்தி இயக்கி வெளியாகியுள்ள படம் அயோத்தி. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ் பால் ஷர்மா, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரம் வரும் குடும்பத்தினருக்கு மத வேறுபாடுகளைத் தாண்டி மனிதத்துடன் உதவுவதைப் பேசும் படமாக அயோத்தி அமைந்துள்ள நிலையில், இப்படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சசிகுமார் நீண்ட காலத்துக்குப் பிறகு இப்படத்தில் ரீ - எண்ட்ரி தந்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மேலும் படம் வெளியானது முதல் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில் மற்றொருபுறம் அயோத்தி படத்தின் கதை யாருடையது என்பது தொடர்பாக சர்ச்சை வெடித்தது.
ஒருபக்கம் தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானவரான எஸ்.ராமகிருஷ்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில், மற்றொருபுறம் எழுத்தாளர் மாதவராஜ் ‘அழக்கூடத் திராணியவற்றவர்கள்’ எனும் தன் கதையை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் மற்றும் எழுத்தாளர் எஸ்.ராவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
எஸ்.ரா ஒருபுறம் படம் வெற்றி பெற்றது குறித்து ஃபேஸ்புக்கில் வாழ்த்தி மகிழ்ந்த நிலையில், மற்றொருபுறம் மாதவராஜின் இந்தப் பதிவு சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அயோத்தி படத்துக்காக எஸ்.ராவை நேரில் சந்தித்து பல கதைகள் கேட்டு இறுதியாக அயோத்தி படத்தின் கதையை தேர்வு செய்ததாக அ.மந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு இயக்குநர் மந்திரமூர்த்தி அளித்த பேட்டியில், ”நான் எழுதிய கதைகளுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்பட்டது. முதல் பட இயக்குநர் ஒருவரை நம்பி பெரிய பட்ஜெட் படத்தை யாரும் தரமாட்டார்கள். மிகவும் தயங்குவார்கள் என நினைச்சேன். முதலில் ஒரு மீடியம் பட்ஜெட் படம் செய்ய முடிவெடுத்து அதற்கான கதையைத் தேடினேன். அப்போது தான் எழுத்தாளர் எஸ்.ராவை சந்தித்து கதை கேட்டேன். அவர் எனக்கு ஏகப்பட்ட கதைகள் சொன்னார். ஆனால் இந்தக் கதையே எனக்குப் பிடித்திருந்தது. அதற்குப் பின் படத்தின் திரைக்கதைக்காக மதுரைக்குச் சென்று ஆய்வு செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அயோத்தி கதை சர்ச்சைக்கு நடுவே இயக்குநர் மந்திரமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Krishnamoorthy about Vadivelu: தவசி படத்தின் எவர்க்ரீன் காமெடி உருவானது எப்படி? கிருஷ்ணமூர்த்தி - வடிவேலு காம்போ? த்ரோ பேக் இன்டர்வியூ