Rajinikanth: “அண்ணாமலையை முதலமைச்சராக்க நினைத்த ரஜினி” - ஆடிட்டர் குருமூர்த்தி தந்த அதிர்ச்சி..!
துக்ளக் பத்திரிக்கையின் 54வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, தனது உரையில் அண்ணாமலை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்க நினைத்தபோது தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலையை தான் முதலமைச்சராக தேர்வு செய்ய நினைத்தார் என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
துக்ளக் பத்திரிக்கையின் 54வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, தனது உரையில் அண்ணாமலை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது, “அண்ணாமலையில் ஐபிஎஸ் அனுபவம் பன்முகத்தன்மை வாய்ந்தது. அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும்போது நடந்த நிகழ்வை நான் சொல்லலாம் என நினைக்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக களமிறங்க வேண்டும் என நினைத்தார். அவர் என்னிடம், ‘நான் முதலமைச்சராக வர மாட்டேன்’ என சொன்னார். அப்படி என்றால் யார் தான் முதலமைச்சர் என கேட்டேன். அதற்கு, ‘சார் உங்களுக்கு தெரியுமா? அண்ணாமலைன்னு ஒருத்தர் இருக்காரு’ என கூறினார்.
It was a natural choice !Superstar @rajinikanth wanted Thalaivar @annamalai_k to be the CM candidate says @sgurumurthy avl ! It shall happen soon 🙏🏻 pic.twitter.com/neCIQ3KkGD
— karthik gopinath (@karthikgnath) January 14, 2024
நான் அண்ணாமலையை பற்றி நியூஸ் பேப்பரில் தான் கேள்விப்பட்டிருக்கிறேன் அவ்வளவு தான். அந்த அளவுக்கு அண்ணாமலை ஐபிஎஸ் ஆபீசராக இருக்கும்போது அவரின் தாக்கம் ரஜினிகாந்துக்கு இருந்தது. பாஜகவின் சிந்தாந்ததால் ஈர்க்கப்பட்டு அண்ணாமலைக்கு பொது வாழ்க்கை, நாட்டு நலன், நாணயம், நேர்மை ஆகியவற்றில் ஒரு நாட்டம் இருந்தது. ஒரு காவல் அதிகாரிக்கு இருக்க வேண்டிய குணங்கள் எல்லாம் அண்ணாமலையில் இருந்தது. அவர் வாழ்க்கையில் நிம்மதியாக இருந்த மனுஷன் இன்று அதனை ஓரம் கட்டி வைத்துவிட்டு அரசியலில் இருக்காரு என்பதில் சந்தேகமும் இல்லை” என தெரிவித்தார்.
இத்தனை நாட்கள் இல்லாமல் ஆடிட்டர் குருமூர்த்தி திடீரென அண்ணாமலை பற்றி ரஜினி சொன்னதை வெளியில் தெரிவித்திருப்பது எதற்காக என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரஜினி அரசியல் பயணம்
கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். தான் ஒரு சாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியலை கொண்டு வருவேன் என்றும் தெரிவித்தார். இதனால் உற்சாகமான மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக அரசியல் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் கொரோனா பரவ தொடங்கிய பிறகு ரஜினியின் உடல் நிலை குறித்து பல தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி கட்சி தொடங்கப்போவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறினார். ஒட்டுமொத்த அரசியல் வட்டாரம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு மக்களும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், டிசம்பர் 29 ஆம் தேதி “அரசியல் கட்சி தொடங்கும் எண்ணமில்லை. தன்னுடைய விருப்பத்திற்காக மற்றவர்களின் நலன் பணயம் வைக்க விருப்பமில்லை” என தெரிவித்தார்.