Maamannan: மாமன்னன் வெற்றி விழா.. 30 வருட ஆதங்கத்தை கொட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்.. இதுதான் காரணமா?
மாமன்னன் படத்தில் தான் பணியாற்ற காரணமே தனக்குள் 20,30 ஆண்டுகளாக இருக்கும் ஆதங்கம் தான் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மாமன்னன் படத்தில் தான் பணியாற்ற காரணமே தனக்குள் 20,30 ஆண்டுகளாக இருக்கும் ஆதங்கம் தான் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மாமன்னன் படம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 28 ஆம் தேதி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் வெளியானது. வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். சாதிய பாகுபாடு அரசியலை வடக்கு மாவட்டத்தில் நடக்கும் கதையாக மாரி செல்வராஜ் சொல்லியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களைப் பெற்றது.
குறிப்பாக வடிவேலுவின் நடிப்பும், ஃபஹத் பாசிலின் வில்லத்தனமும் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. அதேசமயம் கடந்த மாதம் ஓடிடியில் மாமன்னன் படம் வெளியானது. இதில் எதிர்மறையாக சாதிய உணர்வுடன் இருப்பதாக சித்தரிக்கப்பட்ட ஃபஹத் பாசில் கேரக்டரை ஹீரோவாக குறிப்பிட்ட சில சமுதாய இணையவாசிகள் கொண்டாட தொடங்கியதால் சமூக வலைத்தளத்தில் கடும் விவாதம் எழுந்தது. இப்படியாக மாமன்னன் படத்தின் பேச்சு அனைத்து தரப்பு மக்களிடத்திலும் சென்று சேர்ந்தது.
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு
இதனிடையே மாமன்னன் படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘ மாமன்னன் படத்தின் கதை வந்து 20,30 ஆண்டுகளாக ஏன் இப்படி எல்லாம் நடக்குதுன்னு எனக்குள்ள இருந்த ஆதங்கம் தான். என்னால இசையில அதை பண்ண முடியல. அதான் யார் பண்றாங்களோ அவர்களோடு இணைந்து விட்டேன். மாரி செல்வராஜ் வந்து கதை சொல்லும்போது இவ்வளவு நல்லா வரும்ன்னு தெரியாது.
படத்தின் முதல் பாதி எனக்கு பிடிச்ச கலை படைப்புகளை தரும் இயக்குநர்களின் சாயல் இருந்தது. படத்தின் இடைவேளை காட்சியில் உதயநிதி பைக் ஓட்ட, வடிவேலு பின்னால் அமர்ந்து செல்லும் காட்சி இருக்கும். அதில் வடிவேலுவின் பார்வையில் எவ்வளவு விஷயம் இருந்தது. அப்படி ஒரு உணர்வுகள் இருந்தது. பார்க்கும்போது நான் ரொம்ப ஈர்க்கப்பட்டேன். படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு கேரக்டர்கள் தொடங்கி நாய், பன்றி எல்லோருமே சிறப்பாக செய்திருந்தார்கள்’ என தெரிவித்திருந்தார்.
குழம்பிய ரசிகர்கள்
ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் அவருடைய அளவற்ற சிரிப்பும், அளவான பதிலும் தான் ரசிகர்களுக்கு பிடித்ததாக இருக்கும். எப்போதுமே பாசிட்டிவாக பேசும் அவர், 20,30 ஆண்டுகளாக இருக்கும் ஆதங்கம் தான் இப்படத்தில் பணியாற்ற காரணம் என தெரிவிக்க என்ன காரணம் என்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்று உலக அளவில் புகழ் பெற்று விட்டார்.
சினிமாவில் ஆறிமுகமான ஆரம்ப காலக்கட்டத்தில் பாலிவுட்டில் அதிக படங்களில் இசையமைத்த அவர், காலப்போக்கில் அதனை குறைத்துக் கொண்டார். சமீபத்தில் ஒரு நேர்காணலில், இந்தி படங்களை விட தமிழ் சினிமாவில் ஏன் அடிக்கடி வேலை செய்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘இந்தி படங்கள் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் எனக்கு எதிராக ஒரு கும்பல் வேலை செய்கிறது’ என பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அதைத்தான் தனது ஆதங்கமாக ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிடுகிறாரா என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்