Exclusive: அன்னபூரணி நிகழ்ச்சிக்கு தடை விதித்த ஆசிரமம்... ‛நடத்திக் காட்டுறேன்...’ சினிமா பாணியில் சவால் வீடியோ வெளியிட்ட ‛அம்மா’!
‛‛தர்ஷன நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவேன், ஆன்மிக தீட்சையும் தொடர்ந்து கொடுத்துட்டே தான் இருப்பேன். இதை யாரும் தடுக்க முடியாது... யாருக்காகவும் அது நிற்காது....’’ -அன்னபூரணி
‛ஆன்மிக பேமஸ்’ அன்னபூரணி அரசு அம்மா, கடந்த ஜனவரி மாதம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆன்மிக தரிசன நிகழ்ச்சி நடத்தி பேமஸ் ஆக இருந்த நிலையில், அவரது கடந்த கால டிவி நிகழ்ச்சி வெளியாகி, ஓவர் நைட்டில் அவரை பேமஸ் ஆக்கிவிட்டது. இதனால் சர்ச்சையில் சிக்கியது மட்டுமல்லாது, நிகழ்ச்சியையும் ரத்து செய்தார் அன்னபூரணி அரசு அம்மா. கொஞ்ச நாள் அடக்கி வாசித்த அவர் , திடீரென தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் ‛அம்மா எனர்ஜி தர்ஷன்’ என்கிற பெயரில், ஏப்ரல் 3 ம் தேதி மிகப்பெரிய அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் போவதாக அறிவித்தார். இந்த முறை டிமாண்ட் கடுமையாக இருப்பதால், நபர் ஒருவருக்கு ரூ.700 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு முன்பதிவும் நடந்தது.
சென்னை சுதானந்தஆசிரமத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த அருள் பாலிக்கும் வைபவத்தை இயற்கை ஒளி பவுன்டேசன் ஏற்பாடு செய்து வந்தது. ஏப்ரல் 1 ம் தேதியோடு முன்பதிவு நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அன்னபூரணி நிகழ்ச்சி நடைபெறவிருந்த சுதானந்த ஆசிரமத்திற்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அன்னபூரணியின் ‛பேக் ஃபைல்’ விவரத்தை ஆசிரம நிர்வாகிகள் கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, அன்னபூரணி நிகழ்ச்சிக்கான அனுமதியை சுதானந்த ஆசிரமம் ரத்து செய்துள்ளது. இதனால் கடுப்பான அன்னபூரணி, ‛குறிப்பிட்டபடி, குறிப்பிட்ட நாளில் தர்ஷன் நிகழ்ச்சியை நடத்துவேன் என்றும், நடைபெறும் இடம் குறித்து ரகசியமாக முன்பதிவு செய்தவர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என்றும்,’ வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:
‛‛ஏப்ரல் 3 ம் தேதி நடைபெற இருக்கும் தர்ஷன் நிகழ்வு, அந்த தேதியில் சிறப்பாக நடைபெறும். இடம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. அந்த முகவரி, புக் செய்தவர்களின் மொபைல் எண்ணுக்கு தனியாக அனுப்பி வைக்கப்படும். இடம் மாற்றப்பட்ட காரணத்தை கூறுகிறேன். சமூக வலைதளத்தில் தவறான செய்தியை பரப்பி, என்னுடைய ஆன்மிக நிகழ்ச்சி நடத்தவிருந்த ஆசிரமத்திற்கு அழுத்தம் கொடுத்து, நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்துவிட்டார்கள். அதனால் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஆன்மிகம் என்றால் என்னவென்று தெரியாமல், இப்படி செய்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் தியானம் இருக்கு, ஆன்மிக உரை இருக்கு என தெளிவாக போட்டுள்ளேன். ஆனால், நான் அருள்வாக்கு சொல்லப் போவதாக பரப்பி வருகிறார்கள்.
கடந்த காலமும் இல்லாமல், வருங்காலமும் இல்லாமல் ஒவ்வொருவரையும் நிகழ்காலத்தில் வாழ கற்றுக் கொண்டுத்துக் கொண்டிருக்கிறேன். நான் ஏன் அருள் வாக்கு கூற வேண்டும். பல ஆண்டு தவத்தில் கிடைக்காத ஆன்மிக பவரை, என்னுடைய ‛டிவைன்’ பவரால் அத்தனை ஆன்மிக அனுபவத்தையும் கொடுத்து, அமைதியிலும், ஆனந்தத்திலும் நிலை பெய வைத்துள்ளேன். உங்களுக்கு ஆன்மிகம் என்றால் என்ன தெரியும்? எனது தினசரி வீடியோவை பாருங்கள்... எனது பதிவுகளை பாருங்கள். சத்தியத்தை பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு புரியவில்லை என்றால் போய்விடுங்கள். உண்மையான ஆன்மிக தாகம் உள்ளவர்களுக்காக நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.
எல்லா ஆன்மிக குருமார்களும் நடத்தும் ஆன்மிக நிகழ்ச்சியை தான் நானும் நடத்திக் கொண்டிருக்கிறேன். என்னை மட்டும் ஏன் டார்கெட் பண்றீங்க? நீங்க அவதூறு பரப்புவதாலோ, என்னை டார்க்கெட் பண்ணுவதாலோ... என்னுடைய ஆன்மிக பணி நிற்காது. தொடர்ந்து நடைபெறும். தர்ஷன நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவேன், ஆன்மிக தீட்சையும் தொடர்ந்து கொடுத்துட்டே தான் இருப்பேன். இதை யாரும் தடுக்க முடியாது... யாருக்காகவும் அது நிற்காது....’’
இவ்வாறு அந்த வீடியோவில் அன்னபூரணி அரசு அம்மா கொந்தளித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ...
புதிய இடம் குறித்து ரகசியம் காக்க முடிவு!
இதுவரை இரு முறை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில், இரண்டு நிகழ்ச்சிகளும் ரத்தானதால், கடும் பொருளாதார நெருக்கடிக்கு அன்னபூரணி தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இனி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை யாரிடமும் சொல்லப் போவதில்லை என்கிற முடிவை அன்னபூரணி எடுத்துள்ளார். முன்பதிவு செய்தவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு ரகசியமாக இட விபரத்தை அனுப்பி வைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். இதன் மூலம், தனது நிகழ்ச்சியை யாரும் தடுக்க முடியாது என அவர் நம்பியுள்ளார்.
‛அம்மா எனர்ஜி தரிசனம்’ தலைக்கு ரூ.700... விட்டதை பிடிக்க மீண்டும் புறப்பட்ட அன்னபூரணி அரசு அம்மா!