Amazon Prime: ராக்கெட் வேகத்தில் உயரும் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்... எவ்வளவு தெரியுமா?
தற்போது ரூ.999ஆக உள்ள சந்தாத்தொகை ரூ.1,499 ஆக உயர்த்தப்படுகிறது
பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் தனது மெம்பர்ஷிப் தொகையை உயர்த்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சந்தா தொகையில் மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரைம் வீடியோ, பிரைம் மியூசிக், பிரைம் ரீடிங் போன்ற சேவைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமேசான் பிரைம் தனது மெம்பர்ஷிப் தொகையை 50% அதிகரிக்கவுள்ளது. இதன் மூலம் தற்போது ரூ.999ஆக உள்ள சந்தாத்தொகை ரூ.1,499 ஆக உயர்த்தப்படும். இந்த விலை உயர்வு வருடாந்திர சந்தாவுக்கு மட்டுமல்லாது காலாண்டு மற்றும் மாதாந்திர சந்தா தொகையும் உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. காலாண்டு தொகை ரூ.329லிருந்து ரூ.459 ஆக அதிகரிக்கவுள்ளது. அதேபோல மாதாந்திரத் தொகை ரூ.129லிருந்து ரூ.179ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
இதனிடையே இந்த விலை உயர்வு எப்போது முதல் அமலுக்கு வரும் என்பது பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் விரைவில் அமலாகும் என அமேசான் பிரைம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏன் விலை உயர்த்தப்படுகிறது என்பதற்கான விளக்கத்தையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது. "இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ப்ரைம் தனது உறுப்பினர்களுக்கு வழங்கும் மதிப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை மேலும் வசதியாகவும் பொழுதுபோக்காகவும் மாற்ற பிரைம் ஒரு ஒப்பற்ற ஷாப்பிங், சேமிப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. பிரைமை இன்னும் மதிப்புமிக்கதாக மாற்றுவதில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறோம்” என தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே சப்ஸ்கிரைப் செய்து பாதியில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது சப்ஸ்கிரிப்ஷன் தேதி முடியும் வரை சந்தா தொகையில் மாற்றம் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களிடம் மேற்கொண்டு தொகையை செலுத்தத் தேவையில்லை. ஆனால் புதிதாக சந்தாவை மீண்டும் புதிப்பிக்கும்போது, புதிய, அறிமுகம் செய்யப்படவுள்ள தொகையைக் கொண்டு ரினீவல் செய்யலாம்.
கடந்த ஜூலை மாதம் மூலம் பிரைம், யூத் ஆஃபர்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் 18 வயது முதல் 24 வயது வரையிலானவர்கள் பிரமை சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் குறிப்பிட்டத் தொகையை கேஷ்பேக்காக பெற முடியும். இந்நிலையில் சந்தாத் தொகை மாறினாலும் யூத் ஆஃபர் தொடர்ந்து இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்ட்டெல் போன்ற மொபைல் ஆபரேட்டர்களிடமிருந்து பிற சலுகைகளுடன் தொகுக்கப்பட்ட அமேசான் பிரைம் சந்தாவைப் பெறும் பயனர்களையும் விலை மாற்றம் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பயனர்கள் இந்த மாற்றத்தால் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள தங்கள் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களைச் சரிபார்க்க வேண்டும் என அமேசான் பிரைம் நிறுவனம் தெரிவித்துள்ளது.