Amaran : ஏன் முகுந்த் வரதராஜனின் சாதியை குறிப்பிடவில்லை ? இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்
அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் சாதியை மாற்றி சித்தரித்தது தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கமளித்துள்ளார்
அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் கதாபாத்திரத்திலும் சாய் பல்லவி இந்து ரெபெக்கா வர்கீஸ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். தமிழ், இந்தி , தெலுங்கு என அனைத்து தரப்பு ரசிகர்களாலும் அமரன் திரைப்படம் கொண்டாடப்படுகிறது. ஒரு பக்கம் வெற்றிக் கொண்டாட்டம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அமரன் படத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப்படம் மேஜர் முகுந்த் என்கிற தனிப்பட்ட மனிதர் மற்றும் அவருடைய காதல் வாழ்க்கையை சித்தரித்தாலும் இல்ஸாமியர்களை தீவிரவாதிகளாகவே சித்தரிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் காஷ்மீர் பிரச்சனையில் இரு தரப்பு நியாயத்தையும் இந்த படம் பேசவில்லை என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அமரன் படத்தின் நாயகனான மேஜர் முகுந்த் உண்மையில் ஒரு பிராமன சமூதாயத்தைச் சேர்ந்தவர். ஆனால் படத்தில் சிவகார்த்திகேயன் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவராக காட்டப்பட்டிருக்கிறார். மேஜர் முகுந்தின் உண்மையான சாதியை ஏன் மாற்றினார் என்கிற கேள்வியும் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் நடந்த அமரன் வெற்றிவிழாவில் இது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.
மேஜர் முகுந்த் பெற்றோர்கள் வைத்த கோரிக்கை
" அமரன் படத்திற்காக முதல்முறையாக சந்தித்தபோது இந்து ரெபெக்கா வர்கீஸ் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது மேஜர் முகுந்த் ஒரு தமிழர். அவர் கதாபாத்திரத்தில் தமிழ் மரபு இருக்கக்கூடிய ஒரு நடிகரை நடிக்க வைக்கச் சொன்னார். அதுமட்டும் தான் அவர் என்னிடம் வைத்த ஒரே கோரிக்கை. சிவகார்த்திகேயன் ஒரு அக்மார்க் தமிழன். அந்த காரணத்தினால் தான் அவர் இந்த படத்திற்குள் வந்தார் . "அச்சமில்லை அச்சமில்லை " என்று பாரதியார் பாடலை சிவகார்த்திகேயன் பாடியபோதே இந்த படத்தின் வெற்றியை என்னால் கண்ணில் பார்க்க முடிந்தது. அதேபோல் முகுந்தின் அம்மா கீதா மற்றும் அப்பா வரதாரன் ஒரு கோரிக்கை வைத்தார்கள். முகுந்த் எப்போதும் தன்னை ஒரு இந்தியனாக தான் அடையாளப்படுத்திக்க விரும்புவான். தன்னுடைய சான்றிதழ்களில் கூட எந்த வித குறியீடும் இருக்க விரும்பமாட்டான் . அதனால் அவனை ஒரு இந்தியனாக இந்த படத்தில் அடையாளப்படுத்துங்கள் என்று அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். முகுந்த் வேற ஒரு சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் வீட்டிற்கு சென்றபோது எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதை கடந்து மேஜர் முகுந்த் வரதராஜனி இந்திய அரசின் அசோக சக்கரா விருதைப் பெற்றவர். அவர் ஆற்றிய சிறப்பான பணிக்கும் அந்த தியாகத்திற்குமான மரியாதை அமரன் படம் கொடுத்திருக்கிறது என நான் மனதார நம்புகிறேன்" என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்தார்