Pushpa 2 Actors Salary: 'புஷ்பா 2' சம்பள விஷயத்தில் டாப் ஹீரோ ஹீரோயின்களை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா!
சுகுமார் இயக்கத்தில் வெளியான 'புஷ்பா 2' திரைப்படத்தில் நடிப்பதற்காக பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவலை, இந்த பதிவில் பார்க்கலாம்.
டிசம்பர் 4-ஆம் தேதி தென்னிந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 12,000-திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான 'புஷ்பா 2 'திரைப்படம், நாளுக்கு நாள் வசூலை வாரி குவித்து வருகிறது.
சாதனைப்படைக்கும் புஷ்பா 2:
'புஷ்பா 2' திரைப்படம் இந்த வேகத்தில் வசூல் செய்தால், கூடிய விரைவில் இதுவரை அதிகம் வசூல் செய்த சாதனை படங்களான கல்கி, பாகுபலி, ஆர் ஆர் ஆர், பதான், ஜவான், போன்ற படங்களின் சாதனையை முறியடித்து, மற்ற படங்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறும் என கூறுகின்றனர் திரைப்பட விமர்சகர்கள்.
இதுவரை வெளியான எந்த ஒரு படமும், நான்கு நாட்களில் செய்யாத மிகப்பெரிய தொகையை தான் 'புஷ்பா 2' வசூல் செய்துள்ளது. 'புஷ்பா 2' படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்து அறிவித்த படக்குழு, ரூ.829 கோடி வசூல் செய்ததாக தெரிவித்தது. நாளைய தினம் ரூ.1000 கோடியை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து, படக்குழுவுக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.
ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரிலீசுக்கு முன்பே போட்ட வசூலை அள்ளிய புஷ்பா 2, தற்போது பல கோடி ரூபாய் லாபத்தை ஈட்டி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை, வாங்கிய சம்பளம் குறித்த தகவல் பற்றி தெரிந்து கொள்வோம்.
புஷ்பா 2 நடிகர்களின் சம்பளம்:
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடிக்க 150 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவது பாகத்தில் நடிக்க ரூ. 300 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இதன் மூலம் 'கோட்' படத்தில் நடிக்க ரூ.200 கோடி சம்பளம் வாங்கிய தளபதி விஜய்யை முந்தியுள்ளார். அதேபோல் நடிகை ராஷ்மிகா 'புஷ்பா' முதல் பாகத்தில் நடிக்க, ரூ.4 கோடி மட்டுமே சம்பளம் பெற்ற நிலையில், இரண்டாவது பாகத்தில் நடிப்பதற்காக ரூ.10 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஜவான் படத்தில் நடிக்க ரூ.8 கோடி வாங்கிய நயன்தாராவையே நேஷ்னல் கிரஷ் மிஞ்சிவிட்டார்.
'புஷ்பா 2'ம் பாகத்தில் சமந்தாவின் இடத்தை தன்னுடைய ஐட்டம் டான்ஸால் நிறைவு செய்துள்ள இளம் நடிகை ஸ்ரீலிலா, ரூ. 2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். மலையாள நடிகரான பகத் பாசில், 'புஷ்பா' முதல் பாகத்தில் மட்டுமல்ல, இரண்டாவது பாகத்திலும் இவருடைய நடிப்பு அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக பகத் பாசில் ரூ.8 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றாராம்.
பிரபல தெலுங்கு நடிகரான சுனில், 'புஷ்பா 2' படத்தில் நடிக்க ரூ.1.5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார்.
அதே போல் எந்தவித கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ், 'புஷ்பா 2' படத்தில் நடிப்பதற்காக ரூ.2 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.