Ajith: தந்தையை இழந்து தவிக்கும் அஜித்... தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அஜித்தின் தந்தை மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
Ajith: அஜித்தின் தந்தை மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித்குமார். இவரது தந்தை சுப்பிரமணியம். 84 வயதான அவர் பக்கவாதத்தால் 4 ஆண்டுகாலமாக சிரமப்பட்டு வந்த நிலையில், இன்று காலை தூக்கத்திலே உயிரிழந்தார். இன்று காலை சுமார் 3.15 மணியளவில் உடல்நலக் குறைவால் சுப்பிரமணியம் உயிரிழந்த நிலையில், தந்தையை இழந்துவாடும் அஜித்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பல அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்தனர்.
அவரது மறைவுக்கு பலரும் நேரில் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் நடைபெற்றது. ஏற்கனவே நடிகர் அஜித் குடும்பத்தின் சார்பில், அவரது தந்தை மறைவையொட்டி அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டு இருந்தது. இதில், எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்.
எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பயும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் என குறிப்பிட்டு இருந்தனர்.
இதன்படி, இன்று (மார்ச், 24) நண்பகல் 12 மணி அளவில் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் நடிகர் அஜித் அவரது மனைவி ஷாலினி, அவரது சகோதரர்கள் அஜய் குமார்ம் அனில் குமார் உள்ளிட்ட குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
முன்னதாக, அஜித்தின் தந்தை இறப்புக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். இவர்களை தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி நேரில் சென்று அஜித்தின் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனை அடுத்து, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய் அவருக்கு ஆறுதல் கூறினார். இதனை அடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகரும் அஜித்தை போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஜித்தின் தந்தை மறைவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.