Good Bad Ugly: அஜித் ரசிகர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் தந்த ஆதிக்.. ரெட் டிராகனின் ட்ரீட் குட் பேட் அக்லி
அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்திருப்பதால் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Good Bad Ugly: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படம் உலகெங்கும் நேற்று வெளியாகியது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அஜித்தின் ரசிகன் ஆதிக் ரவிச்சந்திரன்:
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களாக உலா வரும் நடிகர்களில் அதிகளவு டான், ரவுடி, கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அஜித். குட் பேட் அக்லி படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் ஆவார்.
ரஜினி, கமல், விஜய் ஆகிய நடிகர்களுக்கு அவர்களது தீவிர ரசிகர்கள் திரைப்படங்கள் இயக்கிய நிலையில், அஜித்திற்கு இதுபோல ரசிகன் ஒருவர் படம் இயக்கமாட்டாரா? என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் நீண்ட காலமாக இருந்தனர்.
அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படம்:
அஜித் ரசிகர்களின் நீண்ட வருட ஏக்கத்தை போக்கும் விதமாக இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்கியுள்ளார். ஏனென்றால், இந்த படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்கள் கொண்டாடுவதற்காக ஒரு அஜித் ரசிகனால் உருவாக்கப்பட்ட படம் என்பது ஒவ்வொரு காட்சியிலும் நன்றாகவே தெரிகிறது.
படத்தின் கதை வழக்கமான ஒரு கதை என்றாலும், திரைக்கதையால் ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அஜித்தின் கடந்த கால திரைப்படங்களான தீனா, பில்லா ஆகியவை அஜித்தின் ப்ளாஷ்பேக்கிற்கு மிகப்பெரிய பலமாக மாறி நிற்கிறது.
அர்ஜுன்தாஸ் அசத்தல்:
இந்த படம் லாஜிக் பார்ப்பதற்காகவே, கேமரா கையாளுதல் பார்ப்பது என எதற்கும் இடம் கொடுக்காமல் முழுக்க முழுக்க கொண்டாட்டத்திற்காகவே எடுக்கப்பட்ட படமாகவே மாறியுள்ளது. அஜித்தின் முந்தைய ப்ளாக்பஸ்டர் படங்களின் குறிப்புகள் ஆங்காங்கே வந்து போவது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.
இது மட்டுமின்றி, அஜித்திற்கு நிகரான ஒரு வலுவான கதாபாத்திரத்தில் அர்ஜுன்தாஸ் நடித்துள்ளார். வழக்கமாக அர்ஜுன்தாஸ் இதுவரை வில்லனாக நடித்த படங்களில் மிகவும் குரூரமான வில்லனாகவே நடித்திருப்பார். ஆனால், இந்த படத்தில் மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரமாகவே நடித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் கலக்கல் இசை:
பிரசன்னாவை இன்னும் அதிகமாக பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றினாலும், சுனிலை நன்றாகவே பயன்படுத்தியுள்ளனர். த்ரிஷாவிற்கு பெரியளவு பங்கு இல்லை என்றாலும், சிறப்புத் தோற்றத்தில் சிம்ரன் மிரட்டியுள்ளார். ஜிவி பிரகாஷ் தனது பின்னணி இசையால் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளார். படத்தில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருந்த மற்ற படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், தல என ரசிகர்களால் அழைக்கப்பட்ட அஜித் சமீபகாலமாக ஏகே என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், ஏகே இந்த படத்திற்கு பிறகு ரெட் டிராகன் என்று புதிய பட்டத்துடன் தமிழ் சினிமாவின் ரெட் டிராகனாக உருவெடுத்துள்ளார்.
3 கேமியோக்கள்:
படத்தில் யாருமே எதிர்பார்க்காதது ஏகே ரெட் டிராகனாக எப்படி மாறினார் என்பதற்கான ப்ளாஷ்பேக்கில் வரும் அந்த 3 கேமியோக்கள்தான் ஆகும். படம் தொடங்கியது முதல் கடைசி வரை, படத்தின் மேக்கிங் வீடியோவையும் அஜித் ரசிகர்கள் ரசித்துச் சென்றனர். அஜித் ரசிகர்கள் வாழ்நாள் முழுவதும் கொண்டாடும் திரைப்படமாக குட் பேட் அக்லியை ஆதிக் ரவிச்சந்திரன் சமர்ப்பித்துள்ளார்.

