HBD Aishwarya Rajesh | ”நீங்கல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை” - ஸ்டீரியோ டைப்பை உடைத்து கெத்து காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்!
சில இயக்குநர்கள் காமெடியன்களுக்கு ஜோடியாக நடிக்க சொல்லி கேட்டார்களாம். ஆனால் அதனை மறுத்த ஐஸ்வர்யா தொடர்ந்து போராடியிருக்கிறார்.
கோலிவுட் சினிமாவின் முக்கியமான நடிகையாக அறியப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற எளிமையான தோற்றத்தை கொண்டிருக்கு ஐஸ்வர்யாவின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணம் என்றால் மிகையில்லை. சென்னையில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் லோவர் மிடில்கிளாஸ் என்றே தன்னை அடையாளப்படுத்துகிறார். சென்னையில் ஹவுசிங் போர்ட் பகுதியில் பிறந்து வளந்த ஐஷ்வர்யாவின் தந்தை தெலுங்கு சினிமாவில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம். கலைத்தாகம் என்பது ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இயல்பாகவே ஊற்றெடுத்த ஒன்றாக இருந்தாலும் , ஐஸ்வர்யாவிற்கு 8 வயது இருக்கும்போது அவரது தந்தை ராஜேஷ் உயிரிழந்துவிட்டார். ஐஷ்வர்யா ராஜேஷிக்கு மூன்று அண்ணன்கள் உள்ள சூழலில் அனைவரின் படிப்பு மற்றும் உணவிற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார். மும்பைக்கு சென்று அங்குள்ள சந்தைகளில் புடவைகளை வாங்கி வந்து , சென்னையில் வீடு வீடாக விற்றுதான் தங்களை வளர்த்தாக தெரிவிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதோடு பகுதி நேர எல்.ஐ.சி ஏஜெண்டாகவும் பணிபுரிந்திருக்கிறார். இன்றளவும் தனது எல்.ஐ,.சி பணியை தொடர்ந்து வருகிறாராம் ஐஸ்வர்யாவின் தாய்.
View this post on Instagram
ஐஸ்வர்யா 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுதே தனது அம்மாவுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே சூப்பர் மார்கெட்டில் வேலை செய்ய தொடங்கினாராம். அதன் பிறகு தொகுப்பாளராக சில பிறந்தநாள் விழாக்களில் வேலை செய்தாராம். அதன் பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் வர , அதில் நடன திறமையை வெளிப்படுத்தி அங்கு வெற்றியாளராக மகுடம் சூட்டியிருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர்களும் இவர்களும் என்னும் திரைப்படத்தில் நடிகையாக களமிறங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து வாப்புகள் தேடி அலைந்திருக்கிறார் ஐஸ்வர்யா. தனது நிறம் , உடை , தோற்றம் போன்றவை மற்ற நடிகைகளில் இருந்து மாறுபட்டிருப்பதால் நான் புறக்கணிக்கப்பட்டேன் என மேடை ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் பேசுவதால் கூட நிராகரிக்கப்பட்டதாக வருந்தும் ஐஸ்வர்யா ராஜேஷிடம், சில இயக்குநர்கள் நேரடியாகவே ’நீங்கல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்ல ‘ என கூறியிருக்கின்றனர்.
View this post on Instagram
இன்னும் சில இயக்குநர்களோ காமெடியன்களுக்கு ஜோடியாக நடிக்க சொல்லி கேட்டார்களாம். ஆனால் அதனை மறுத்த ஐஸ்வர்யா தொடர்ந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க போராடியிருக்கிறார். மூன்று வருட தொடர் போராட்டத்திற்கு பிறகு அட்டக்கத்தி படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சிறிய ரோலாக இருந்தாலும் அந்த படத்தில் அவர் அங்கீகரிக்கப்பட்டார். அந்த படத்தை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும் , ரம்மி உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நாயகியாக களமிறங்கியிருக்கிறார். ஆனாலும் பெரிதாக கண்டுக்கொள்ளப்படாத நடிகையாகவே இருந்த ஐஸ்வர்யாவின் திரையுலக வாழ்க்கையை மாற்றியமைத்த திரைப்படம் காக்கா முட்டை. நாயகியாக வேண்டும் என போராடிய ஐஸ்வர்யா, காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த துணிவே அவருக்கு வெகுவான பாராட்டையும் வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்த ஐஸ்வர்யா இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரம் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு , மலையாளம் சினிமாக்களிலும் பிரபலம். சினிமாவில் முன்னேற எங்கிருந்து வருகிறோம் எந்த நிறத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. சினிமா மீதான ஆர்வமும் , உழைப்பும் இருந்தால் போதும் என்பதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு உதாரணம்.
ஸ்டீரியோ டைப்பை உடைத்து வெற்றி நடை போடும் ஐஸ்வர்யா , மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள்!