Aishwarya About Relationship : அவனை உதைச்சா சரியாகிடும்.. ரிலேஷன்ஷிப் குறித்து பேசிய ஐஷ்வர்யா
"லவ்வை அக்செப்ட் பண்ண பிறகு இப்படி இருக்காத, இந்த டிரஸ் போடாத, இவங்களோட ஏன் பேசுற, அங்க போக கூடாது அப்படி இப்படினு ஏராளமா ஆர்டர் போடுவாங்க" ரிலேஷன்ஷிப்பு பற்றி ஐஸ்வர்யா மனம் திறந்தார்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை லட்சுமி ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக அன்றைய காலகட்டத்தில் ஜொலித்தவர். அவரின் மகள் ஐஸ்வர்யா தனது அம்மாவை போலவே ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஹீரோயினாக ஐஸ்வர்யா :
தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தது 'நியாயங்கள் ஜெயிக்கட்டும்' திரைப்படத்தில். அதற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராசுக்குட்டி, மீரா, உள்ளே வெளியே திரைப்படங்களுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையானார். நடிகர் பாக்யராஜ் ஜோடியாக ஐஸ்வர்யா நடித்த 'ராசுக்குட்டி' திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் மெகா சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சவுண்ட் சரோஜாவாக ரீ என்ட்ரி :
1994-ஆம் ஆண்டு தன்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா அதற்கு பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யா - த்ரிஷா நடிப்பில் வெளியான 'ஆறு' திரைப்படத்தில் சவுண்ட் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் மெட்ராஸ் பாஷை பேசும் ஒரு கதாபாத்திரமாக கலக்கலாக நடித்திருந்தார். சவுண்ட் சரோஜா என்ற பெயரால் பிரபலமான ஐஸ்வர்யா அதே பெயரில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம் அழகுக்கலை, சமையல் குறிப்பு போன்ற தேவையான டிப்ஸ்களை வழங்கி வந்தார்.
'டாடா' படத்தில் ஐஸ்வர்யா :
அந்த வகையில் மீண்டும் திரைப்படங்களில் தலை கட்ட துவங்கிய ஐஸ்வர்யா, அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பிப்ரவரி 10ம் தேதி வெளியாக உள்ள 'டாடா' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர் ஐஸ்வர்யா. கணேஷ் பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் 'டாடா'.
ரிலேஷன்ஷிப்பும் நீடிக்கவில்லை :
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் தனது திருமண வாழ்க்கை குறித்து பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றேன். அதற்கு பிறகு அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரின் இரண்டாவது திருமணம் குறித்து எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. ஆனால் விவாகரத்து பெற்ற பிறகு நான் வேறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் அதுவும் நீடிக்கவில்லை. லவ் பண்ணும் போது எது எல்லாம் பிடிக்கும் என்றார்களோ நாட்கள் போக போக அதை எல்லாம் முதலில் கைவிடவேண்டும் என்பார்கள். லவ்வை அக்செப்ட் பண்ண பிறகு இப்படி இருக்காத, இந்த டிரஸ் போடாத, இவங்களோட ஏன் பேசுற, அங்க போக கூடாது அப்படி இப்படினு ஏராளமா ஆர்டர் போடுவாங்க.
உதைச்சா சரியாகிவிடும் :
தாய்க்கு பின் தாரம் என்பதை எவன் சொன்னானோ அவனை உதைச்சா சரியாகிவிடும். எங்க அம்மா இப்படி பண்ணுவாங்க அப்படி பண்ணுவாங்க, ஊட்டிவிடுவாங்கனு சொல்லுவாங்க. நான் ஏன் உனக்கு ஊட்டிவிடனும்? உன்னோட அம்மா போல நான் ஏன் இருக்கணும்? அவர் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருந்தார் ஐஸ்வர்யா. அவரின் இந்த துணிச்சலான பேச்சிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.