HBD Urvashi : நடிப்பு ராட்சஷி.. பெண் சார்லி.. ஊர்வசியின் பிறந்தநாள் இன்று..
HBD Urvashi : இன்றும் சுறுசுறுப்புடனும், குறும்புத்தனத்துடனும் ஒரு ராட்சசிபோல ரசிகர்களை கவர்ந்து தன்னுடைய கைக்குள் அடக்கி வைத்திருக்கும் சகலகலாவல்லி நடிகை ஊர்வசியின் 55வது பிறந்தநாள் இன்று.
திரையுலகை பொறுத்தவரையில் நடிகைகளின் வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதில் அனைவரும் அமைந்துவிடாது. பல போராட்டங்கள் கடந்து தான் அவர்களால் முன்னுக்கு வர முடிகிறது. ஹீரோக்களுக்கு மட்டுமே அதிக அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலகட்டத்தில் பெரும்பாடுபட்டு தன்னுடைய திறமைகளால் முன்னுக்கு வந்து இன்று வரை நான் சினிமாவில் தான் இருப்பேன் என விடப்பிடியாக அதே சுறுசுறுப்புடனும், குறும்புத்தனத்துடனும் ஒரு ராட்சசிபோல ரசிகர்களை கவர்ந்து தன்னுடைய கைக்குள் அடக்கி வைத்திருக்கும் சகலகலாவல்லி நடிகை ஊர்வசியின் 55வது பிறந்தநாள் இன்று.
தன்னுடைய 10 வயதில் திரையுலகத்திற்குள் அடியெடுத்து வைத்த ஊர்வசி 13 வயதிலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தது தான் ஆச்சரியம். 'முந்தானை முடிச்சு' பரிமளத்தை அவ்வளவு எளிதாக யாரது மறந்து விடமுடியுமா என்ன? 80ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மட்டுமின்றி 90ஸ், 2kகிட்ஸ் மத்தியிலும் மிகவும் ஜாலியான ஒரு நடிகையாக வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஊர்வசி.
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்திய ஊர்வசி இன்றும் ஆக்டிவான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். ஊர்வசி காமெடியாக நடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை, அவர் பேசும் வசனமும் அவரின் முக பாவனைகளுமே பார்ப்பவர்களுக்கு குபீர் என சிரிப்பை வரவைத்துவிடும். சீரியஸ் கேரக்டரில் நடித்தால் கூட அதில் ஒரு இன்னசென்ஸ் இருக்கும். அதுதான் ஊர்வசியின் தனிச்சிறப்பே. சமீபத்தில் ஊர்வசியின் நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன், யானை முகத்தான் உள்ளிட்ட படங்கள் அவரின் வெகுளித்தனத்தை வெகு சிறப்பாக வெளிப்படுத்தியது.
டப்பிங் ஆர்டிஸ்டாக தன்னுடைய பயணத்தை துவங்கிய ஊர்வசி தமிழில் அறிமுகமாகும்போது அவருக்கு வயது 13. தன்னுடைய கதாபாத்திரங்களை மிகவும் நேர்த்தியாக தேர்ந்து எடுக்கும் ஊர்வசி ஒருபோதும் தன்னுடைய சம்பளம் குறித்து கவலைப்பட்டதே இல்லை. ஒரு சின்ன கேரக்டரில் நடிப்பது என்றலும் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அதில் நடித்துள்ளார். அவர் மிகவும் பிஸியான இருந்த காலகட்டங்களில் எந்தெந்த படங்களுக்கு சம்பளம் வாங்கினார், எதற்கு வாங்கவில்லை என்பது பற்றி கணக்கு செய்தது கூட கிடையாதாம்.
ஊர்வசியின் நடிப்புக்கு தீனியாய் அமைந்த திரைப்படங்களின் வரிசையில் நிச்சயமாக மகளிர் மட்டும், மைக்கேல் மதன காமராஜன், சூரரைப்போற்று, மாயா பஜார் படங்கள் இடம்பெற்று இருக்கும். பெண் சார்லி சாப்ளின் என்றும் நடிப்பு ராட்சஷி என்றும் செல்லமாக அழைக்கப்படும் ஊர்வசி மேலும் மேலும் தன்னுடைய வெகுளித்தனம் நடிப்பால் ரசிகர்களை கவர வாழ்த்துக்கள்.