“தனுஷ் ஹீரோ என்றதும் எப்படி கேரியர் இருக்குமோ என அம்மா பயந்துவிட்டார்“ - மனம் திறக்கும் சோனியா அகர்வால்!
சோனியா அகர்வால் மல்லி மற்றும் நாணல் சீரியலில் நடித்திருக்கும் நிலையில், சினிமாவிற்கும் சின்னத்திரை சீரியலுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை எனக்கூறியுள்ளார்.
காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் ஹீரோன்னு சொன்னதும் எங்க அம்மா ரொம்ப பயந்துவிட்டார்கள் எனவும் இந்த ஹீரோவுடன் நடித்து எப்படி உன்னுடைய கேரியர் சிறப்பாக இருக்கும் எனக்கூறியதாக மனம் திறக்கிறார் நடிகை சோனியா அகர்வால்.
காதல் கொண்டேன் திவ்யாவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பஞ்சாபைச்சேர்ந்த நடிகை சோனியா அகர்வால். இப்படத்தின் ஆடிசன்காக முதன் முதலாக சென்னை வந்த இவர் யாராலும் மறக்க முடியாத பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஒவ்வொரு கேரக்டரும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யாராலும் மறக்கவே முடியாது. கடந்த 2003 ல் காதல் கொண்டேனில் தொடங்கி, 7ஜி ரெயின்போ காலணி, மதுர, கோவில், ஒருநாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே போன்ற பல வித்தியாசமானத் திரைப்படங்களில் நடித்து மக்களின் நன்மதிப்பைப்பெற்ற பெருமைக்குரியவராக உள்ளது. இயக்குநர் செல்வராகவனைத் திருமணம் செய்துக்கொண்ட பின்பாக நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை.. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்த சோனியா அகர்வால், என்னுடைய கேரியரில் காதல் கொண்டேனை எப்போதும் மறக்க முடியாது எனவும், இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தான் மிகவும் சவாலாக அமைந்தது எனத் தெரிவிக்கிறார்.
குறிப்பாக கீழே விழுகின்ற காட்சிகளை நீங்கள் தான் செய்ய வேண்டும் இயக்குநர் செல்வராகவன் தெரிவித்தாகவும், இதற்காக மிகவும் சிரமப்பட்டேன் என்கிறார். மேலும் உடம்பில் அடிபடும்போதெல்லாம் 5 நிமிட இடைவெளியில் மருத்துவர் வந்து சிகிச்சை அளித்தப்பின்னர் சூட்டிங்கைத் தொடர்ந்ததாகவும் மனம் திறந்து பேசியுள்ளார்.
செல்வராகவனின் இயக்கம் மற்றும் குடும்ப வாழ்க்கை:
செல்வராகவன் மிகவும் கண்டிப்பான மற்றும் திறமையான இயக்குநர். ஒரு காட்சி எடுக்கும் போது என்ன வேண்டும் என்று நினைக்கிறாரோ? அதனை எடுத்துமுடிக்கும் வரை விடமாட்டார். சில சமயங்களில் அவரிடம் திட்டு வாங்கிய போது, தனுஷ் வந்து தனக்கு ஆறுதல் கூறுவார். இவரின் கண்டிப்பு தான் வெற்றிப்படத்தைக் கொடுக்கமுடிந்ததும் எனவும் பெருமையுடன் கூறுகிறார். மேலும் தமிழ் மொழியே தெரியாதக் காலத்தில் தனக்கு மொழியைக்கற்றுக்கொடுத்து நடிப்பையும் கற்றுக்கொடுத்தவர் செல்வராகவன் தான் எனக்கூறுகிறார்.
சினிமா வாழ்க்கையையடுத்து, செல்வராகவன் மீது தான் கொண்ட பிரியம் மற்றும் அவர்கொண்ட காதலால் மட்டுமே இணைந்தோம் என்று கூறும் சோனியா, இதனால் என் சினிமா வாழ்க்கைப் பாதிப்படும் என்று ஒரு நாளும் தான் எண்ணியதே இல்லை என்கிறார்.
இதனைத்தொடர்ந்து தன்னுடன் நடித்த நடிகர்கள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்த சோனியா, கோவில் படத்தை நாங்கள் நாகர்கோவிலில் 3 மாதங்கள் தங்கியிருந்து சூட்டிங் மேற்கொண்டோம் எனவும் சிம்பு எனக்கு ரொம்ப நல்ல நண்பர் எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்படத்தில் டான்ஸ் ஆடுவதற்கு மிகவும் சிரமப்பட்ட சமயத்தில் சிம்பு எனக்கு மிகவும் உதவியாக இருந்தார் எனவும் பெருமையுடன் கூறுகிறார்.
மேலும் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் சிம்பு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கூறியதோடு, என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்கிறார் சோனியா.
மேலும் விஜய் ரொம்ப அமைதியான மனிதர் எனக் குறிப்பிடும் சோனியா, எந்த ஹீரோவாக இருந்தாலும் தான் நடிப்பேன் எனவும் பாலக்காடு மாதவன் படத்தில் விவேக் சாருக்கு ஜோடியாக நடித்ததில் எனக்கு எவ்வித கவலையும் இல்லை எனவும் கூறியுள்ளார். நான் நடிகர் தான் யாருடன் வேண்டுமானாலும் நடிக்க இயக்குநர் சொன்னால் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
சீரியலில் சோனியா அகர்வால்:
சோனியா மல்லி மற்றும் நாணல் சீரியலில் நடித்திருக்கும் நிலையில், சினிமாவிற்கும் சின்னத்திரை சீரியலுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை எனக்கூறியுள்ளார். ஆனாலும் சீரியலில் ஒரு சீன் எடுப்பதற்கு ஒரு நாள் முழுவதும் செலவாகும். காலை முதல் நடித்துக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தான் அதில் தலைவலி. மேலும் சினிமாவில் நடிக்கும் காட்சிகளுக்கு நிறைய டைம் இருப்பதால் நடிப்பைத் திறமையாக வெளிப்படுத்துவோம். ஆனால் சீரியலில் அதுப்போன்று இருக்காது. இந்த வார எபிசோட்டுக்கு என்ன தேவையோ? அதை முடித்தே ஆக வேண்டும். இது தான் அதில் பிரச்சனை என்கிறார். இதோடு என்னைப்பற்றிய எந்த வதந்திகள் வந்தாலும் கடுப்பாகத் தான் இருக்கும். ஆனால் இதனை தான் கண்டுக்கொள்ள மாட்டேன் எனவும் கூறுகிறார் நடிகை சோனியா அகர்வால்..