Actress Shriya Saran: 'இளையராஜாவுடனான சந்திப்பு தெய்வீகமாக இருந்தது' - நடிகை ஸ்ரேயா நெகிழ்ச்சி
இளையராஜாவை முதல்முறையாக பார்த்தேன். மிகவும் அமைதியாக பாடல்களை உருவாக்கிக் கொண்டு இருந்தார். அவரது இடமே தெய்வீகமாக இருந்தது. இப்படத்தில் நடித்து எனக்கு பெருமையாக உள்ளது என்று ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
டோலிவுட், கோலிவுட் சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து தன் திருமணத்துக்குப் பின்னும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரேயா சரண்.
மீண்டும் நடிப்பில் அசத்தும் ஸ்ரேயா:
2001ஆம் ஆண்டு தெலுங்கில் இஷ்டம் எனும் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ரேயா, 2003ஆம் ஆண்டு கோலிவுட்டில் ‘எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்துடன் ஸ்ரேயா நடித்த சிவாஜி தி பாஸ் திரைப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பின் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரேயா, 2018ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் எனும் ரஷ்ய டென்னிஸ் வீரரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து ‘ராதா’ எனும் பெண் குழந்தைக்கு சென்ற ஆண்டு தாயானார். இதன் பிறகு ஃப்ட்னெஸ்ஸில் முழுவீச்சில் கவனம் செலுத்தத் தொடங்கி ஸ்ரேயா மீண்டும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஸ்ரேயா நடித்துள்ள மியூசிக் ஸ்கூல் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (மே.05) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரேயா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:
மே 12-ந் தேதி ரிலீஸ்:
“கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. மீண்டும் சென்னை வந்துள்ளதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. இந்தப் படம் இதயப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மீது திணிக்கப்படும் அழுத்தத்தை பற்றி இப்படம் பேசுகிறது. தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகள் இதுபோன்ற அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.
இது ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை பற்றிய படம். தனித்திறமைகள் பற்றியதல்ல. எனது கடினமான காலகட்டத்தில் நான் நடனமாட தொடங்கி விடுவேன். நடனமாட எனக்கு பிடிக்கும். படக்குழுவினர் சிறப்பாக உழைத்துள்ளனர். இவர்களுடன் வேலை செய்தது அருமையாக இருந்தது.
தெய்வீகம்:
இளையராஜாவை முதல்முறையாக பார்த்தேன். மிகவும் அமைதியாக பாடல்களை உருவாக்கிக் கொண்டு இருந்தார். அவரது இடமே தெய்வீகமாக இருந்தது. இப்படத்தில் நடித்து எனக்கு பெருமையாக உள்ளது. எல்லோரும் இப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள். இப்படத்தை பார்க்கும்போது உங்களை நீங்களே கண்டுகொள்வீர்கள். இங்கு வந்த அனைவருக்கும் நன்றி.
நான் நிறைய புதுமுக இயக்குனர்களுடன் பணிபுரிந்துள்ளேன். இது நிறைய கற்றுக்கொள்ள உதவுகிறது. எனக்கு குழந்தைகள் பிடிக்கும். இதில் நடித்த குழந்தைகள் அனைவரும் திறமையானவர்கள்” எனப் பேசினார்.
மேலும் படிக்க: Ilayaraja Controversy Tweet: மனோபாலாவை கொச்சைப்படுத்தி தற்பெருமை பேசுவதா? - இளையராஜாவிடம் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்