Vijayakanth: விஜயகாந்த் ஒரு கடவுள்.. இறந்த அன்று நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. சாந்தி வில்லியம்ஸ் பேச்சு
Vijayakanth : விஜயகாந்த் நிஜமாகவே கடவுள். அவர் மட்டும் அமைச்சரா, முதலமைச்சரா இருந்திருந்தால் உலக மக்களுக்கு எல்லாம் நல்லது பண்ணியிருப்பார் - சாந்தி வில்லியம்ஸ்
விஜயகாந்த் நிஜமாகவே கடவுள். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என நேர்காணல் ஒன்றில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்தாண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நினைவிடத்திற்கு வருகை தருகின்றனர். இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை சாந்தி வில்லியம்ஸ் தன்னை பொறுத்தவரை விஜயகாந்த் ஒரு அன்னதான பிரபு என புகழ்ந்துள்ளார்.
மேலும் அதில், “விஜயகாந்த் நிஜமாகவே கடவுள். அவர் மட்டும் அமைச்சரா, முதலமைச்சரா இருந்திருந்தால் உலக மக்களுக்கு எல்லாம் நல்லது பண்ணியிருப்பார். மக்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. இவரை அன்ன பிரபு என சொல்லலாம். இவரை ஏன் கடவுளுக்கு சமம் என சொல்கிறேன் என்றால் அவரது உடல் அடக்கம் செய்ய எடுத்து செல்லும்போது கோயம்பேடு பாலம் அருகே இரண்டு கழுகுகள் மேலே வட்டமிட்டது. அப்போது தான் இவர் கடவுள் என சொன்னேன். நான் விஜயகாந்துடன் கேப்டன் மற்றும் நரசிம்மா என இரண்டு படங்கள் நடித்தேன்.
இதில் நரசிம்மா படம் ஷூட்டிங் டி.ராஜேந்தர் கார்டனில் நடந்து கொண்டிருந்தது. எனக்கு அதில் 2 நாட்கள் வேலை இருந்தது. எனக்கான ஆடைகள் உள்ளிட்ட அனைத்தும் வாங்கிட்டார்கள். ஷூட்டிங் முடிந்ததும் நான் வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தேன். அப்போது மேனேஜர் வந்து பெரிய கவர் ஒன்றை என்னிடம் நீட்டினார். ரூ.20 ஆயிரம்தான் என்னுடைய சம்பளம் என நான் சொல்லிவிட்டு, இது எனக்கு வரவேண்டிய கவர் இல்லை என தெரிவித்தேன்.
அப்போது அங்கு வந்த விஜயகாந்த் என்ன பிரச்னை என என்னிடம் கேட்டார். நான் பணம் அதிகமாக இருப்பதாக சொன்னேன். எடுத்துட்டுப்போங்க என கூறினார். அதற்கு காரணம் என பின்னாளில்தான் தெரிந்தது. அதாவது வாய்ப்பு கேட்டு அலைந்த காலகட்டத்தில் ஜெமினி பாலம் அருகே உள்ள லாட்ஜில்தான் விஜயகாந்துக்கு வில்லிம்ஸூடன் நல்ல பழக்கம் இருந்துள்ளது. இது அவர் சொல்லித்தான் எனக்கு தெரியும். வில்லியம்ஸ் உடம்பு சரியில்லாமல் இருப்பதை தெரிந்து கொண்டு தான் அதிகமாக பணம் கொடுத்துள்ளார்.
இதை நான் என்னவென்று சொல்ல தெரியவில்லை. எங்கோ பிறந்து,வளர்ந்து,வந்து,யாருக்கோ உதவி பண்ணாரு. விஜயகாந்தின் குடும்பம் அந்த பெயரை காப்பாற்ற வேண்டும். அவர் கடவுள் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது” என கூறியுள்ளார்.