Saroja Devi: 60,70ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி.. கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி நடிக்க வந்தது எப்படி?
Saroja Devi Passed Away: தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி நடிக்க வந்தது எப்படி? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி. அவர் இன்று பெங்களூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். 1955ம் ஆண்டு முதன்முதலில் நடிக்க வந்த சரோஜாதேவி தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என 1960, 70 காலகட்டங்களில் தமிழ் சினிமாவை கலக்கிய பிரபலங்களின் ஆஸ்தான கதாநாயகியாக உலா வந்தவர்.
சரோஜா தேவி நடிக்க வந்தது எப்படி?
சுமார் 120க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக மட்டுமே நடித்துள்ள சரோஜாதேவி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சரோஜா தேவி நடிக்க வந்தது எப்படி தெரியுமா?

நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற பழமொழிக்கு ஏற்பவே சரோஜாதேவி நடிக்க வந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. 1938ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி இன்றைய கர்நாடக தலைநகரும், அன்றைய மைசூருக்கு கீழே வந்த பெங்களூரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு காவல்துறை அதிகாரி. இவரது தாய் வீட்டை பராமரித்து வந்தார்.
அம்மாவின் ஆசை:
சிறுவயது முதலே நடனம் கற்று வந்தார். ஆனால், இவரது எண்ணம், ஆசை எல்லாம் கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்பதே ஆகும். பள்ளி ஆண்டு விழா ஒன்றில் இவர் நடித்த நாடகத்தை அப்போது கன்னட திரையுலகின் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவர் சினிமாவில் நடிக்கிறியா? என்று கேட்டுள்ளார்.
ஹொன்னப்ப பாகவதரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்றே சரோஜாதேவிக்கு தெரியவில்லை. ஆனால், சரோஜாதேவியின் பெற்றோர்களுக்கு அவரை திரையில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால், அவரது தாயின் ஆசைக்காக முதல் படத்தில் நடித்தார். அப்படி அவர் கன்னடத்தில் நடித்ததுதான் 1955ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தில் நடித்தார். அப்போதும், படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சரோஜாதேவியிடம், அவரது அம்மா இன்னொரு படத்தில் நடிச்சுடு.. அதன்பின் படிக்கலாம் என்று அவரது தாய் கூறியுள்ளார்.

பின்னர், தனது தாயின் ஆசைக்காக அடுத்த படத்திலும் நடித்தார். இதுதொடர்பாக, சரோஜாதேவியே தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அம்மாவின் ஆசைக்காவே முதல் இரண்டு கன்னட படங்களில் நடித்தேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், சரோஜாதேவி சிறுவயது முதலே நடனத்தில் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும், அவருக்கு நடனம் ஆடும்போது காலில் சலங்கை கட்டி ஆடும்போது காயங்கள் ஏற்பட்டு, கால்களில் புண்களும் ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது எல்லாம் சரோஜாதேவியின் காலை துடைத்து, விளக்கெண்ணெய் வைத்து காலில் அவரது தந்தை வலிநிவாரணியாக தேய்த்து வலியை போக்கியுள்ளார்.
பெற்றோரின் முடிவுக்கு கட்டுப்பட்ட சரோஜாதேவி:
மகாகவி காளிதாஸ் படத்தில் நடிப்பதற்காக சரோஜாதேவிக்கு ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்துள்ளனர். அப்போதும், தனக்கு நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றே சரோஜாதேவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் அளித்த பேட்டியில் எந்தவொரு முடிவும் எடுக்கத் தெரியாத வயது அது. எந்த வழியில் போவது என்று தெரியவில்லை. கடைசியாக சினிமாவில் நடிப்பது என பெற்றோர் முடிவெடுக்க, நானும் அந்த முடிவுக்கு வர வேண்டியதாயிற்று என்று தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் கதாநாயகியாக நடித்த அவருக்கு அதன்பின்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு தமிழில் வரவேற்பும், புகழும் கிடைத்தது. தொடர்ச்சியாக எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் ஜோடியாக நடித்து வெற்றி மேல் வெற்றிப் படங்களை தந்து கொண்டிருந்தார். இதனால், புகழின் உச்சிக்கே சென்றார்.
கன்னடத்து பைங்கிளி:

தான் ஒரு நடிகையாவேன் என்று கூட நினைத்துக்கூட பார்க்காத சரோஜாதேவி தமிழில் மிகப்பெரிய நடிகையாக உலா வந்தார். கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று அவரை தமிழில் ரசிகர்கள் அன்புடன் அழைக்கத்தொடங்கினார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தவர் விஜயகாந்த், விஜய், சூர்யா என பல பிரபலங்களுடன் இணைந்தும் நடித்துள்ளார்.





















