(Source: ECI/ABP News/ABP Majha)
HBD Saritha : நடிப்பா.. நிஜமா.. குரலால் கேரக்டருக்கு உயிர் கொடுக்கும் சரிதா.. ஹேப்பி பர்த்டே
அறிமுகமே சரசு என்ற கதாபாத்திரத்தில் வில்லங்கமான ரோல். இது போன்ற ரோல்களில் நடித்தால் இவர் அப்படிப்பட்ட நடிகை என முத்திரை குத்தி விடுவார்கள் என்பதை தாண்டியும் மிகவும் துணிச்சலாக நடித்து சபாஷ் பெற்றார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் மட்டுமின்றி சினிமா உலகில் மிகவும் பிரபலமான பல நட்சத்திரங்களாக இருக்கும் பலரையும் சினிமா துறைக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர். அவரின் மற்றுமொரு அதிசய கண்டுபிடிப்பு தான் நடிகை சரிதா. தனித்துமான இயல்பான நடிப்பால், கள்ளங்கபடமில்லாத சிரிப்பால், வெகுளித்தனமான பின்னணி குரலால் உச்சத்தை தொட்ட நடிகை சரிதாவின் 63வது பிறந்தநாள் இன்று.
பாலசந்தர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'மரோசரித்ரா' படத்தின் ஹீரோயினுக்காக ஏராளமான புது முகங்கள் ஸ்க்ரீனிங் டெஸ்ட் செய்யப்பட்டனர். அந்த பரிட்சையில் வெற்றி பெற்றது சரிதா. அவரின் ஸ்பெஷலிட்டியே தனித்துமான முகபாவம் மற்றும் மேனரிசம்தான். சிகப்பான தோல் இருந்தால் தான் ஹீரோயின் என ஏற்று கொள்ளும் காலத்தில் கருப்பு நிறத்தில் இருந்த சரிதா பல கேலியும் கிண்டலையும் சந்தித்த போதிலும் நடிப்பால் கவனம் ஈர்த்தார்.
அடுத்ததாக தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான 'தப்புத் தாளங்கள்' திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியானார். அறிமுகமே சரசு என்ற கதாபாத்திரத்தில் வில்லங்கமான ரோல். இது போன்ற ரோல்களில் நடித்தால் இவர் அப்படிப்பட்ட நடிகை என முத்திரை குத்தி விடுவார்கள் என்பதை தாண்டியும் மிகவும் துணிச்சலாக நடித்து சபாஷ் பெற்றார். அதுவே அவருக்கு பல நல்ல கேரக்டர்கள் அமைய காரணமாக அமைந்தது. முழுமையான நம்பிக்கையை இயக்குநர் மீதும் தனது கதாபாத்திரம் மீதும் வைத்து நடித்தால் நிச்சயம் அது வெற்றியை தேடி தரும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் சரிதா.
சரிதா எந்த ரோலில் நடித்தாலும் அவர் சொல்ல நினைப்பதை அவரின் கண்களே சொல்லிவிடும் அளவிற்கு அத்தனை எக்ஸ்பிரஸிவ் கண்கள். ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீவித்யா போன்ற பேசும் கண் அழகிகளின் வரிசையில் அடுத்ததாக இடம் பிடித்தார் சரிதா. அதே போல அவரின் இன்னசெண்ட் கலந்த மெச்சூரிட்டியான குரலும் பிளஸ் அதன் மாடுலேஷனும் பிளஸ் பாயிண்டாக அமைந்தன. மழலைத்தனமும், வெகுளித்தனமும் குரலில் விளையாடினாலும் உணச்சிகரமான வசனங்கள் என்றால் அதுவே உணர்ச்சி பிழம்பாக கொந்தளிக்கும். உடல் மொழிக்கேற்ப குரலை பாவங்களோடு செதுக்கி பேசுவது என்பது அனைவராலும் செய்ய முடியாது. அப்படி பட்ட தனித்துமான பாடிலாங்வேஜ் கொண்டவர் சரிதா.
சக நடிகர்களுடன் ஒரே ஃப்ரேமில் நடிக்கையில் அனைவரையும் தூக்கி சாப்பிடும் நடிப்பால் ஒளிர்பவர் நடிகை சரிதா. மெளன கீதங்கள், பொண்ணு ஊருக்கு புதுசு, தண்ணீர் தண்ணீரும், அக்னி சாட்சி, வேதம் புதிது, நெற்றிக்கண், மலையூர் மம்பட்டியான், தங்கைக்கோர் கீதம், ஊமைவிழிகள், ஜூலிகணபதி இப்படி சரிதா நடித்த கதாபாத்திரங்கள் இன்றும் மனதில் பதிந்து கிடக்கிறது.
நடிப்பில் பல ரகங்களை காட்டிய சரிதா நடிப்பதில் இருந்து விலகிய பிறகும் தன் வசீகரமான வெள்ளந்தியான குரலால் பல ஹீரோயின்களின் நடிப்பிற்கு உயிர் கொடுத்தார். ஈடு இணை இல்லாத இந்த நடிகையின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ! ஹேப்பி பர்த்டே