'ராம்கியிடம் `ஐ லவ் யூ!’ சொன்னது இல்லை!' - காதல் சீக்ரெட்ஸ் பகிர்ந்த நடிகை நிரோஷா!
நடிகை நிரோஷா தனக்கும் தனது கணவர் ராம்கிக்கும் இடையிலான தொடக்க கால காதல் கதை குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் இதுவரை தனது கணவர் ராம்கியிடம் `லவ் யூ’ சொன்னதே இல்லை என்பதைக் கூறியுள்ளார்.
நடிகை நிரோஷா தனக்கும் தனது கணவர் ராம்கிக்கும் இடையிலான தொடக்க கால காதல் கதை குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் இதுவரை தனது கணவர் ராம்கியிடம் `லவ் யூ’ சொன்னதே இல்லை என்பதைக் கூறியுள்ளார்.
நடிகர் ராம்கியுடனான தொடக்க கால அறிமுகம் குறித்து பேசிய நடிகை நிரோஷா, `தொடக்கத்தில் இருந்தே எனக்கும் நடிகர் ராம்கிக்கும் இடையில் மோதல் போக்கு மட்டுமே இருந்தது. நாங்கள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருப்போம். நடிக்கும் போது, அவர் என்னைத் தொடும் போது, அவரிடம் `அனுமதி கேட்க மாட்டீங்களா? கமல் சார் கூட நடித்திருக்கிறேன்.. அவர் கூட தொடுவதற்கு முன்பு, அனுமதி கேட்பார்.. நீங்க யாருங்க?’ என ராம்கியிடம் கேட்டிருக்கிறேன். `உன் படம் வரப்போகுது.. நாங்க தியேட்டர்ல போய் கத்துவோம்.. படம் ஊத்திக்கப் போகுது’ என அவரும் சார்லியும் என்னைக் கிண்டல் செய்துகொண்டே இருப்பார்கள். அப்போது எனக்கு அவரைப் பிடிக்கவே பிடிக்காது. அதனைத் தொடர்ந்து நாங்கள் நண்பர்கள் ஆனோம்’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, இருவரும் காதலிக்கத் தொடங்கியது குறித்து பேசிய நிரோஷா, `ராம்கியிடம் நான் இதுவரை `லவ் யூ’ என்று சொன்னது இல்லை.. அவரும் என்னிடம் அதனைச் சொன்னது இல்லை.. ஏன் எனத் தெரியவில்லை. செந்தூரப்பூவே படப்பிடிப்பிற்காக நீர் வீழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பு நடத்தினோம். அப்போது நான் அதில் மூழ்கினேன்.. எனக்கு மிகப்பெரிய விபத்து ஒன்று நேர்ந்தது. நான் செத்துப் பிழைத்தேன். அந்த விபத்து நடந்த அடுத்த நான்கு, ஐந்து நாள்களில் எனக்கு மீண்டும் ரயிலில் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தின் போது, என்னைக் காப்பாற்றியது ராம்கி தான். அந்த விபத்து முழுமையாக நிகழ்ந்திருந்தால் என் விலா எலும்புகள் நொறுங்கியிருக்கும். என்னை அனைவரும் சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். அப்போது அவர் என்னிடம், `கவலைப்படாதே.. நான் இருக்கிறேன்’ எனக் கூறினார். அதன்பிறகு தான் நான் அவரை விரும்பத் தொடங்கினேன்’ எனப் பகிர்ந்துள்ளார்.
தனது காதலுக்குத் தனது குடும்பத்தின் எதிர்ப்பு குறித்து, `எங்கள் வீட்டில் சினிமா துறையைச் சேர்ந்தவர்களைக் காதலிக்க கூடாது என்பதில் உறுதியாகவும், கண்டிப்பாகவும் இருந்தனர். நான் நடிக்க விரும்பவில்லை. அப்போது மணிரத்னம் சார் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது, என் அக்கா ராதிகா தான் என்னை நடிக்க அனுமதித்தார். படம் நன்றாகப் போனாலும், போகாவிட்டாலும் கவலைப்பட வேண்டாம் என்பது அப்போது எங்கள் எண்ணம். படப்பிடிப்புக்குச் செல்லும் போது, என் அண்ணனோ, அம்மாவோ வருவார்கள். அப்போது ராம்கியிடம் என்னால் பேச முடியாது. நான் ராம்கியிடம் ஃபோனில் பேசி, வீட்டில் அடி வாங்கியிருக்கிறேன். தொடர்ந்து என் அக்கா ராதிகா நாங்கள் இருவரும் ஒன்றாக நடிக்க கூடாது என உத்தரவிட்டார். ஆனால் அப்போது நாங்கள் இருவரும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கொடுத்த ஜோடியாக அறியப்பட்டிருந்தோம். `இணைந்த கைகள்’ படத்தில் ராம்கிக்கு நான் தான் ஜோடி. ஆனால் படத்தின் பூஜை முடிந்தவுடன், என் அக்கா ராதிகா நான் இந்தப் படத்தில் நடிக்க கூடாது எனத் தடை விதித்தார். தொடர்ந்து என்னை அருண் பாண்டியனுக்கு ஜோடியாக மாற்றினார்கள்’ என்றும் நிரோஷா தெரிவித்துள்ளார்.
கடந்த 1995ஆம் ஆண்டு, நடிகை நிரோஷாவும், நடிகர் ராம்கியும் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.