Mamitha Baiju: பாலா அடித்ததால் வணங்கானில் இருந்து விலகினேனா? - நடிகை மமிதா பைஜூ விளக்கம்!
படத்தின் ப்ரீ புரொடக்ஷன், புரொடக்ஷன் என ஒரு வருடத்திற்கு மேல் பாலா சாருடன் வேலை பார்த்திருக்கிறேன். நான் ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் எப்போதும் அக்கறை காட்டினார்.
வணங்கான் படப்பிடிப்பின் போது இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக வெளியான குற்றச்சாட்டுக்கு நடிகை மமிதா பைஜூ மறுப்பு தெரிவித்துள்ளார்.
சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்
நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் பாலா தமிழில் “வணங்கான்” என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். முதலில் இப்படத்தில் ஹீரோவாக சூர்யா நடித்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய சில வாரங்களிலேயே கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சூர்யா விலகியதாக பாலா தெரிவித்தார். தொடர்ந்து இந்த படத்தை நடிகர் அருண் விஜய்யை வைத்து அவர் எடுத்து முடித்துள்ளார். இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் இணைந்து தயாரித்துள்ள வணங்கான் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் ஹீரோயினாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, மிஷ்கின், சண்முக ராஜன், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள வணங்கான் படம் சர்ச்சையில் சிக்க தொடங்கியுள்ளது.ஏற்கனவே பாலாவின் முந்தைய படங்களில் நடித்தவர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்துக் காட்டுகிறேன் என்ற பெயரில் அடிக்கும் வீடியோக்கள் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
நடிகையை அடித்தாரா பாலா?
இந்நிலையில் இப்படத்தில் முதலில் நடித்து விட்டு பின்னர் விலகிய நடிகை மமிதா பைஜூ வணங்கான் படத்தின் படப்பிடிப்புன் போது இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக கூறியதாக செய்திகள் வெளியானது. அதில் வில்லுப்பாட்டு தொடர்பான காட்சி ஒன்று இருந்தது. அதில் நான் இசைக்கருவி ஒன்றை வாசித்தபடி பாட வேண்டும். எனக்கு பயிற்சி எடுத்துக் கொள்ள போதுமான நேரம் கிடைக்கவில்லை. இதனால் அக்காட்சி படமாக்கப்படும்போது ரீடேக் சென்றது. இதனால் பாலா என் தோள்பட்டையில் அடித்தார் என ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.
இதுதொடர்பான நேர்காணல் வீடியோ வெளியாகி கடும் பிரச்சினைகளை கிளப்பியது.பலரும் இயக்குநர் பாலாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மமிதா பைஜூ விளக்கம்
இந்நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மமிதா பைஜூ இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “அனைவருக்கும் வணக்கம். நான் வணங்கான் என்ற தமிழ் படத்தில் நடித்தது தொடர்பாக இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரு திரைப்பட ப்ரோமோஷன் நேர்காணலின் ஒரு பகுதி தவறாகக் குறிப்பிடப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.
படத்தின் ப்ரீ புரொடக்ஷன், புரொடக்ஷன் என ஒரு வருடத்திற்கு மேல் பாலா சாருடன் வேலை பார்த்திருக்கிறேன். நான் ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் எப்போதும் அக்கறை காட்டினார். வணங்கான் படத்தில் பணிபுரிந்தபோது மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ எந்த விதமான துன்புறுத்தலையும் நான் அனுபவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிற தொழில்ரீதியான ஒப்பந்தங்கள் காரணமாகவே அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டேன். வெளியிடும் முன் செய்தியை சரிபார்க்க என்னை தொடர்பு கொண்ட ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.இதனால் பாலா மீதான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.