Madhoo on Hindi Language: "இந்தி தேசிய மொழி என்று கூறுவது தவறு.. ஆனால்.." - சரவெடியாய் வெடித்த நடிகை மதுபாலா...
`ரோஜா’ திரைப்படம் மூலம் திரைத்துறையில் தனி முத்திரை பதித்த நடிகை மதுபாலா இந்தி மொழி குறித்து எழுந்துள்ள விவாதங்கள் தொடர்பாக தனது கருத்துகளை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய மொழி இந்தி அல்ல என்று தென்னிந்திய நடிகர்கள் முன்னெடுத்துள்ள பிரசாரம் இணைய உலகைக் கலக்கி வருகிறது. இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, நடிகர்கள் கிச்சா சுதீப், சிரஞ்சீவி முதலானோர் வெளிப்படையாகவே இந்தி திணிப்பு குறித்தும், இந்தியத் திரைப்படத்துறையில் இந்தி திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை குறித்தும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் இந்தி மொழியைத் தேசிய மொழி எனக் கூறியும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், `ரோஜா’ திரைப்படம் மூலம் திரைத்துறையில் தனி முத்திரை பதித்த நடிகை மதுபாலா இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். `எனது தனிப்பட்ட அனுபவங்கள் `ரோஜா’ திரைப்படத்தின் மூலமாக நிகழ்ந்தன. தமிழில் `ரோஜா’ திரைப்படம் வெளியான போது, வெற்றிப் படமாக மாறியது. அதே போல, இந்தி மொழியில் வெளியான பிறகு, தேசிய அளவில் வெற்றிப் படமாகவும் `ரோஜா’ இருந்தது. ஷாரூக் கான் திரைப்படங்களை யாரும் டப்பிங் கேட்பது இல்லை. ஷாரூக் கான் படத்தை ஷாரூக் கான் படமாகவே மக்கள் பார்க்கிறார்கள். மேலும், தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகியவற்றில் இந்தி திரைப்படங்கள் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகின்றன. பிற பகுதிகளில் இந்தி திரைப்படங்களுக்கு வரவேற்பு குறைவு. மக்களுக்கு மொழி தெரியாததால் இவ்வாறு இருந்தாலும், அதே மக்கள் தங்கள் மொழியில் வெளியாகும் திரைப்படங்களை ரசித்து பார்க்கிறார்கள். பல்வேறு கலைத் திரைப்படங்கள் தென்னிந்திய மொழிகளில் வெளியாகின்றன. நாம் அதனைப் பார்த்ததே இல்லை. தற்போது மலையாளத் திரைப்படங்களை சப்டைட்டில் உதவியோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக, துல்கர் சல்மான் சிறப்பான திரைப்படங்களில் நடிக்கிறார் என்பதை நாம் பெருமையுடன் பார்க்கிறோம். எனவே இது சண்டையிடுவதற்கான நேரம் அல்ல. அனைவரும் தங்கள் மாநிலங்களில் இருந்து வெளியே வந்து, பெரியளவிலான மக்களுக்குத் தங்கள் திரைப்படங்களைக் காண்பிக்கின்றனர். இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று’ என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து நடிகை மதுபாலா, `தென்னிந்தியாவில் அரசு இந்தி மொழியைக் கடுமையாக எதிர்த்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளிகளில் இந்தி கற்றுத் தரவில்லை எனப் பிரச்னைகள் எழுந்தன. ஆனால் இந்தப் பிரச்னைகளால் இந்தியர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? நம்மை வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள் என அழைக்கிறோம். ஆனால் நாம் இந்தியர்கள். உங்கள் மொழிகளுள் ஒன்றைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது உங்களுக்கு என்ன பயன் அளித்தது? இந்த விவகாரத்தில் எதையும் அறியாதவள் நான். இந்தி ஏன் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அது நம் வரலாறு. நீங்கள் இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, இந்தி மொழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், பாதிக்கப்படுவது யார்? யாருடைய குறை அது? இந்தி தெரியாதவர்களின் குறை அது!’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், `அதே நேரம் சிலர் இந்தி மொழியை நிச்சயமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்கள். இந்தி மொழியைப் பிறரின் தொண்டைகளில் திணிப்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். மொழிவாரியான இந்த விவாதம் எனக்கு கவலை அளிக்கிறது. அனைத்து மொழித் திரைப்படங்களையும் இந்தி மொழியில் டப்பிங் செய்து ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல்களை நாம் கண்டிருக்கிறோம். அதனை நாம் அனைவருமே விரும்பி பார்த்திருக்கிறோம். அப்படி இருக்கும் போது, இந்த விவாதம் ஏன் எழ வேண்டும்? சமீபத்தில் வெற்றிபெற்ற பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் முதலான திரைப்படங்களின் காரணமாக இந்த விவாதம் எழுந்திருக்கலாம். இந்தி இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்று. ஆங்கிலமும் அதனுடன் பல்வேறு மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழிகளின் கீழ் வருகின்றன. ஒரு மொழியின் பயன் என்பது அதனைப் புரிந்துகொண்டு, பெருவாரியான மக்களிடையே கருத்தைக் கூறுவதாகும். இந்தியைப் பல்வேறு தரப்பு மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக அரசு மக்களிடம் இந்தி மொழியைப் பயன்படுத்தி மக்களைப் பிரிக்கும் வேலைகளைச் செய்ய கூடாது. `இந்தி தேசிய மொழி’ என்று கூறுவது தவறு. அது அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்று. இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.