Kayal Anandhi: சாதியில்லா சமூகத்தை நாம் தான் உருவாக்க வேண்டும் - கயல் ஆனந்தி வேண்டுகோள்!
எனக்கு மட்டுமல்ல,என் குடும்பம், என் கணவர் குடும்பம் என எல்லாரும் சாதியில்லா சமூகம் பற்றிய எண்ணம் தான் உள்ளது.
நான் நடித்துள்ள மங்கை படம் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய வகையில் இருக்கும் என நடிகை கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார்.
கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. அந்த படத்தின் பெயரே அவரது அடையாளமாக மாறிப்போனது. இதனிடையே கயல் ஆனந்தி தற்போது ‘மங்கை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் துஷி, ஷிவின், சாம்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். குபேந்திரன் காமாட்சி இயக்கியுள்ள மங்கை படம் மார்ச் 1 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இப்படத்தின் ப்ரோமோஷன் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனிடையே கடந்தாண்டு கயல் ஆனந்தி ராவணக்கோட்டம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்படம் சாதிய அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் பற்றிய நேர்காணலின்போது கயல் ஆனந்தியிடம், சாதியின் தாக்கம் தொடர்பாக கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நான் என் மகனுக்கு சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிடவில்லை. சாதியில்லா சான்றிதழ் பெற்றுள்ளேன். இதற்கு முன்னால் என்னுடைய தலைமுறை வரை தொடர்ந்த சாதி பெயரை என் மகனுக்கும் தொடர விரும்பவில்லை என தெரிவித்திருந்தார். இது மிகுந்த பாராட்டைப் பெற்றது.
"விசாரணை , பரியேறும் பெருமாள் அந்த வரிசைல இப்போ மங்கை" https://t.co/wupaoCzH82 | #KayalAnanthi #Mangai #MangaiFromMarch01 #Pressmeet pic.twitter.com/585pivc8rD
— ABP Nadu (@abpnadu) February 22, 2024
இந்நிலையில் மங்கை படம் தொடர்பான நேர்காணலில், இந்த சாதியில்லா சான்றிதழ் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு. “எனக்கு மட்டுமல்ல,என் குடும்பம், என் கணவர் குடும்பம் என எல்லாரும் சாதியில்லா சமூகம் பற்றிய எண்ணம் தான் உள்ளது. எங்களுடைய மங்கை படம் பாலின சமத்துவம் பற்றி தான் பேசுகிறது. அப்படியே சாதி விஷயங்களில் கூட மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும்,”த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் நான் பார்க்கவே இல்லை. அதேபோல் மங்கை படத்தையும் இதுவரை நான் பார்க்கவில்லை. இப்படம் ஒரு பெண் மட்டுமல்லாமல் ஆண்கள் உள்ளிட்ட எல்லாரும் பார்க்க வேண்டிய படமாக இருக்கும். படம் வெளியான பிறகு அது உங்களுக்கு புரியும். எனக்கு பொதுவாக விரிவாக கதையை கேட்பது என்பது பிடிக்கும். அப்பதான் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியும். அப்படித்தான் மங்கை படத்தின் கதையை தேர்வு செய்தேன்” எனவும் அந்த நேர்காணலில் கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Double Tuckerr: வளர்ந்து வரும் ஹீரோக்கள் என்னை மனுசனா கூட மதிக்கல; கண்கலங்கிய அறிமுக இயக்குநர்