1000க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகம்! சிவாஜியை வைத்து விழா! ஜெயசித்ரா பகிர்ந்த சினிமா வாழ்க்கை
என் முதல் படத்தையும் 100வது படத்தையும் கேஎஸ் கோபாலகிருஷ்ணன் தான் என்று கூறியுள்ளார் நடிகை ஜெயசித்ரா. இவர் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
என் முதல் படத்தையும் 100வது படத்தையும் கேஎஸ் கோபாலகிருஷ்ணன் தான் என்று கூறியுள்ளார் நடிகை ஜெயசித்ரா. இவர் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தாயார் அம்மாஜி, தந்தை மகேந்திரன். இவரது தாயாரும் நடிகை தான். இவர் குழந்தை நட்சத்திரமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் அறிமுகமானார். ஆனால், கே.பாலசந்தரின் அரங்கேற்றம் அவரை வெகுவாக அடையாளம் காட்டியது.
இவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது
அவர் கூறியதாவது:
நான் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாகத் தான் அறிமுகமானேன். என்னை திரையில் அறிமுகப்படுத்தியவர் கேஎஸ் கோபாலகிருஷ்ணன் சார் தான். ஆனால் அதற்கு முன்னதாகவே நாகேஸ்வர ராவ் சாருடன் நடிக்க என்னை ஆடிஷனுக்கு கூட்டிச் சென்றிருந்தனர். அது விட்டலாச்சார்யா படம். விட்டலாச்சார்யா சார் என்னைப் பார்த்தார் நான் நாகேஸ்வர ராவ் சாருடன் நடிக்க ரொம்பவே சின்னப் பெண்ணாக தெரிந்ததால் என்னை தேர்வு செய்ய இயலவில்லை என்றார். ஆனால் அவர் தான் என்னை கேஎஸ்ஜி சாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் அப்போதே நான் நடிகையாக வருவேன் என்று கணித்ததால் என்னை கேஎஸ்ஜி சாரிடம் பரிந்துரைத்திருக்கிறார் என்றே நான் நம்புகிறேன். என் 100வது படம் நாயக்கரின் மகள். அதில் நான் ஒரு கரகாட்டக்காரப் பெண்ணாக இருப்பேன். அது ஒரு அழகான கதை. செந்தமிழ் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு தாசி மகள் எப்படி நாட்டை ஆளும் திருமகளாகிறாள் என்பதுதான் கதை. இந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது. நான் எனது விசுவாசத்தை கேஎஸ்ஜி அவர்களுக்குக் காட்ட நான் நடிகர் சிவாஜி கணேசன் சாரை அழைத்து விழா நடத்தினேன்.
எனக்கு ஃபீமேல் ஆடியன்ஸ் தந்த படம்:
எனக்கு பெண்கள் ஆடியன்ஸை பெற்றுத் தந்த படங்கள் பொண்ணுக்கு தங்க மனசு மற்றும் வெள்ளிக்கிழமை விரதம். வெள்ளிக்கிழமை விரதம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என்னுடன் சிவகுமார் மற்றும் பலரும் நடித்தனர். கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் உதவி நடன இயக்குனராக மாஸ்டர் தங்கப்பனிடம் பணியாற்றியிருந்தார். சங்கர் கணேஷ் சார் மியூசிக் பண்ணியிருந்தார். அந்தப் படம் தான் எனக்கு ஃபீமேல் ஆடியன்ஸ் கிடைக்கக் காரணம்.
1000க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகம்:
நான் எனது 5வது வயதில் இருந்து 1000க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகம் பண்ணியிருக்கிறேன். ஒரு நாட்டிய நாடக விழாவில் பத்மினி அம்மா என்னை கவுரவித்தார். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். நான் குச்சிப்பிடி நடனத்தில் அரங்கேற்றம் செய்திருக்கிறேன்.
இவ்வாறு ஜெயசித்ரா கூறினேன்.