8 நிமிட பாட்டுக்கு 11,600 கலைஞர்களை வைத்து டான்ஸ் ஆடி கின்னஸ் சாதனை படைத்த திவ்யா உன்னி!
கொச்சியில் 11,600 பரதநாட்டிய கலைஞர்களை வைத்து 8 நிமிட பாடலுக்கு, டான்ஸ் ஆடி நடிகை திவ்யா உன்னி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஆண்டான் அடிமை படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்யா உன்னி. வேதம், பாளையத்து அம்மன், சபாஷ், கண்ணன் வருவான் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்திற்கு பின்னர் சில படங்களில் மட்டுமே நடித்தார்.
2 குழந்தைகள் பிறந்த பின்னர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இதை தொடர்ந்து சப்ஃட் வேர் இன்ஜினியர் ஒருவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் திவ்யா உன்னிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம், இந்திய நாட்டுப்புற நடனம் ஆகிய கலைகளின் மீதான ஆர்வத்தால் அதனை கற்றுக் கொண்டு, நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு விழாக்களிலும், வட அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் சர்வதேச அரங்குகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தான் கொச்சியில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அதில் கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார். கொச்சியிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை கேரளா கலாச்சாரத்துறை அமைச்சர் ஷாஜி செரியன் தொடங்கி வைத்தார். இந்த கலை நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட 11,600 பரதநாட்டிய கலைஞர்கள் உடன் இணைந்து 8 நிமிட பாடல் ஒன்றிற்கு டான்ஸ் ஆடி திவ்யா உன்னி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது சாதனையை நாடே பேசும் அளவிற்கு செய்துள்ளார். இதையடுத்து அவரது இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.