தேவயானிக்கு பிறந்தநாள் பார்ட்டி வைத்த தம்பி.. சூர்ய வம்சம் பாடலுக்கு நடனம்.. குவியும் வாழ்த்துகள்
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து பிரபலம் அடைந்த தேவயாணி நேற்று தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தொட்டாச் சிணுங்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் தேவயானி. இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. இதைத்தொடர்ந்து அஜித்துடன் இணைந்து காதல் கோட்டை படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து விஜய், சரத்குமார், விக்ரம், கமல், மம்மூட்டி போன்ற ஸ்டார் நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
கோலங்கள் சீரியலில் தேவயானி
படங்களில் நடித்து வந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் மக்களின் மனதை வென்றார். 1000 எபிசோடுகளை தாண்டி ஹிட் தொடராகவும் கோலங்கள் இடம்பிடித்தது. மேலும், தேவயானி படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போதே விக்ரமனின் உதவி இயக்குநராக இருந்த ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ராஜகுமாரன் நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களில் தேவயானி ஹீரோயினாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காதல் ஜோடிக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
சரிகமப-வில் தேவயானி மகள்
தேவயானியின் மூத்த மகள் இனியா, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு பாடி வருகிறார். சமீபத்தில் மகள் பாடுவதை பார்த்து தேவயாணி ஆனந்த கண்ணீர் வடித்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதையும் தாண்டி படங்களில் நடிப்பதை காட்டிலும் தனக்கு டீச்சர் ஆக வேண்டும் என்ற கனவும் இருக்கிறது தெரிவித்த தேவயானி, தனியார் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். மேலும், தேவயாணி - ராஜகுமாரன் தம்பதி தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இயற்கை பண்ணையை உருவாக்கி அதில் பலவிதமான உணவு பொருட்களையும் விதைத்து வருகின்றனர்.
தேவயானி பிறந்தநாள் கொண்டாட்டம்
சூர்ய வம்சம் படத்தின் ஜோடியான சரத்குமாருடன் தேவயானி தற்போது 3BHK படத்தில் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து பல படங்களில் லீட் ரோலில் நடித்து வரும் தேவயானி நேற்று தனது 51 பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். அப்போது அவரது தம்பியான நகுல் தேவயானிக்கு பார்ட்டி வைத்து பிறந்தநாளை கொண்டாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அப்போது சூர்ய வம்சம் படத்தில் இடம்பிடித்த நட்சத்திர ஜன்னலில் பாடலுக்கு தேவயானியும், நகுலும் நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோவை நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தேவயானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.





















