Aditi Balan: நல்ல கதையா வந்தா நடிக்க மாட்டேனா? - கேப்டன் மில்லர் பட நேர்காணலில் டென்ஷனான அதிதி பாலன்..!
கேப்டன் மில்லர் படத்தில் தனக்கேற்பட்ட அனுபவங்களை நடிகை அதிதி பாலன் ஏ.பி.பி சேனலுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் இருந்து சில தகவல்களை காணலாம்.
அருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். இவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் கெளரவ கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். கேப்டன் மில்லர் படம், நடிகர் தனுஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டவர்கள் குறித்து தனது அனுபவத்தைப் அந்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார் பிரியங்கா மோகன்.
அருவி - கருமேகங்கள் கலைகின்றன
தனது முதல் படம் அருவியில் ஒரு அறிமுக இயக்குநருடன் வேலை செய்ததும் அதே நேரத்தில் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் அனுபவமிக்க தங்கர் பச்சன் படத்தில் நடித்ததற்குமான வித்தியாசத்தைப் பற்றி பேசினார் அதிதி பாலன். " அருவி படத்தை இயக்கிய அருண் பிரபுவுக்கு அது முதல் படம் என்றாலும் சினிமாவிற்குள் அவர் நிறைய காலம் இருந்தவர். இந்த படத்தில் நடித்த பெரும்பாலானவர்களுக்கு இது முதல் படம் என்பதால் நாங்கள் அனைவரும் இணைந்து இதில் நிறைய விஷயங்களை சேர்ந்து செய்தோம்.
என்னுடைய ஷூட் தொடங்கிய முதல் 3 நாட்களும் படம் பார்ப்பது தான் வேலையாக இருந்தது. Blue is the warmest colour, three colour trilogy போன்ற படங்களைப் பார்க்க சொன்னார் அருண் பிரபு. அதே நேரத்தில் தங்கர் பச்சனும் நிறைய புத்தகங்கள் படிக்கக் கூடியவர். அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தில் என்னுடன் நடித்த பாரதிராஜா, கெளதம் மேனன் என எல்லாரும் நிறைய அனுபவம் இருந்தவர்கள். தங்கர் பச்சன் விவசாயம் செய்பவர் என்பதால் அது பற்றி என்னிடம் நிறைய பேசியுள்ளார். இரண்டு படங்களில் இயக்குநர்களுக்கு தங்களுக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவு இருந்தது" என்று அதிதி பாலன் கூறினார்.
கேப்டன் மில்லர்
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் குறித்து பேசும்போது, “அருண் இயக்கிய ராக்கி மற்றும் சாணி காயிதம் உள்ளிட்ட படங்களின் மிகப்பெரிய ரசிகை நான். அவரது கேப்டன் மில்லர் படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் ஆனான் அதற்குள்ளாக எல்லா கதாபாத்திரங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கடைசியில் தான் இப்போது நடித்துள்ள ஒரு சிறிய கதாபாத்திரம் மட்டும் இருப்பதாகவும் அதில் பெரிதாக ரோல் இல்லை என்றாலும் அடுத்தடுத்தப் பாகங்களில் இந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கூடும் என்று இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்த காரணத்தினால் இந்த கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளதாகவும் அதிதி பாலன் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக சினிமாவில் இருந்து குறைவான படங்களில் மட்டுமே தான் நடித்துள்ள காரணத்தை விளக்கினார் அவர். " நான் எல்லா வகையிலான கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரே மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிப்பது எனக்கு போர் அடிக்கிறது. அதனால் கொஞ்சம் மாறுபட்ட கதைகளை தேடிப் போகிறேன். போல்டான கதாபாத்திரங்கள் மட்டுமே நடிப்பது எனது விருப்பம் கிடையாது. ஒரு நல்ல திரைக்கதை போல்டாக கதாபாத்திரம் இல்லாமல் வந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லையே. அந்த மாதிரியான நல்ல கதைகள் எனக்கு வரவில்லை. இந்த வருடம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் குறித்து பேச்சு
நடிகர் தனுஷ் குறித்து பேசிய அதிதி பாலன். " எனக்கும் தனுஷுக்கும் காம்பினேஷன் சீன் கிடையாது. ஆனால் நான் அவரை செட்டில் வைத்து பார்த்திருக்கிறேன். அவரிடம் பேசியிருக்கிறேன். உங்களைப் பார்க்க மட்டும்தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்று விளையாட்டாக அவரிடம் சொன்னேன். தனுஷ் நடிப்பதை பார்க்க வேண்டும் எனக்கு அவ்வளவு ஆசை. அவர் செட்டில் பார்க்க நார்மலாக நடந்து செல்வார். ஆனால் ட்ரெய்லரில் பார்க்கும் போது அவர் வேற மாதிரியான மனிதராக வெளிப்படுகிறார். ஒரு காட்சியில் அவரது கண் மட்டுமே அவ்வளவு தீவிரமாக நடிக்கிறது அதை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அடுத்த பாகத்தில் எங்கள் இருவருக்கும் சில காட்சிகள் சேர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.