ஆந்திர அரசியலில் இறங்குகிறேனா? - விளக்கமளித்த நடிகர் விஷால்
நடிகர் விஷால் ஆந்திர அரசியலில் இறங்குவதாக எழுந்த தகவலை அடுத்து அது தொடர்பாக அவர் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் விஷால் ஆந்திர அரசியலில் இறங்குவதாக எழுந்த தகவலை அடுத்து அது தொடர்பாக அவர் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.
விஷால் தனது ட்விட்டரில், ஆந்திர அரசியலில் நான் இறங்கவிருப்பதாக வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன. குப்பம் தொகுதியில் நான் போட்டியிடப்போவதாகவும் பேச்சுக்கள் வருகின்றன. இவை அத்தனையையும் நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். இதையெல்லாம் நானே அறியவில்லை. அப்புறம் எங்கிருந்து இத்தனை செய்திகளைச் சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வதந்தி எங்கிருந்து உருவானது என்றும் தெரியவில்லை. நான் இப்போது சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறேன். இனிமேலும் சினிமாவில்தான் கவனம் செலுத்துவேன். ஆந்திர அரசியலில் நான் இறங்கவும் திட்டமில்லை. சந்திரபாபு நாயுடுக்கு எதிராகப் போட்டியிடவும் திட்டமில்லை. இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
— Vishal (@VishalKOfficial) July 1, 2022
விஷாலுக்கு ஜெகன் ஆதரவா?
ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதைய முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதியில் 151 தொகுதிகளை கைப்பற்றி ராட்சச பலத்துடன் ஆட்ச்சியை கைப்பற்றியது, இவரை எதிர்த்து நின்ற சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலைமைக்கு தள்ளப்பட்டது, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி வெறும் 1 தொகுதியை மட்டும் கைப்பற்றியது. பவன் கல்யாணும் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில் வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இப்பகுதி கர்நாடக மற்றும் தமிழகத்தின் எல்லை பகுதி, கர்நாடகாவின் கே.ஜி.எஃப் லிருந்து வெறும் 22 கிலோமீட்டர் மட்டுமே அதே போல் சித்தூரிலிருந்து தமிழக எல்லையான காட்பாடி வெறும் 30 கிலோமீட்டர் மட்டுமே ஆகும். குப்பம் தொகுதி உட்பட சித்தூர் மாவட்டத்தில் பெரும் அளவில் தமிழகத்திலிருந்து வேலைக்கு சென்று குடியேறியவர்வர்களே தற்போது அங்கு பெரும் வாக்காளர்களாக உள்ளனர், இதனால் தமிழக மக்களுக்கு மிகவும் அறிந்த முகமான அதே வேளையில் ஆந்திர மக்களுக்கும் தெரிந்த முகமான ஒருவரை தேர்வு செய்ய ஆலோசித்த போது சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வும் மாநில அமைச்சருமான பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி பரிந்துரைத்த பெயர் நடிகர் விஷால். அதனால் அவரை முதல்வர் ஜெகனும் ஆதரிக்கிறார் என்று கூறப்பட்டது.
நடிகர் விஷாலும் ஆர்கேநகரும்..
கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது அவர் நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் எனப் பல வெற்றிகளைப் பெற்றிருந்தார். அதனால், தமிழக அரசியலிலும் போட்டியிடுவதாக அறிவித்தார்.
தமிழக தேர்தல் அரசியலில் எப்படி திருமங்கலம் ஃபார்முலா என்று ஒன்று பிரபலமாக இருந்ததோ அதேபோல் ஆர்கேநகர் தேர்தலுல் புதிய புதிய திருப்பங்களை ஏற்படுத்தியது. ஆர்கேநகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று அதிமுக, திமுகவையே கலங்கடித்தார். 20 ரூபாய் நோட்டை டோக்கனாகக் கொடுத்து பரிசுப் பொருட்களை உறுதி செய்ததாக டிடிவி தினகரன் மீது புகார்கள் எழுந்தன. அப்போது அவர் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். அந்த வெற்றிக்குப் பின்னால் தான் அமமுக என்ற கட்சியும் உருவானது. திமுக, அதிமுக, சசிகலா ஆதரவு கொண்ட டிடிவி என போட்டியிட்ட ஆர்கேநகர் தொகுதியில் அரசியல் கத்துக்குட்டியாக களமிறங்கினார் நடிகர் விஷால்.
அவரது வேட்புமனுவை ஏற்கப்படவே பல்வேறு சங்கடங்களை போராட்டங்களை விஷால் சந்திக்க வேண்டியிருந்தது. தேர்தலில் விஷால் வெற்றி பெறவில்லை. ஏன் சொல்லிக்கொள்ளும் வாக்குகள் கூடப் பெறவில்லை. அதன் பின்னர் விஷால் வேறெந்த தேர்தலிலும் மூச்சுக் காட்டவில்லை.
இந்நிலையில் தான் விஷால் ஆந்திர அரசியலில் இறங்கப்போவதாக தகவல் வெளியாகினது. அது தொடர்பாக அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
இதன்மூலம் அவர் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் குப்பம் தொகுதியில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்துப் போட்டியிடுவார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.