22 Years of Dhill: ஆக்ஷன் ஹீரோவான ‘சீயான் விக்ரம்’ .. மாஸ் காட்டிய ‘தில்’ படம்.. இன்றோடு 22 ஆண்டுகள் நிறைவு..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விக்ரம் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த ‘தில்’ படம் வெளியாகி இன்றோடு 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விக்ரம் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த ‘தில்’ படம் வெளியாகி இன்றோடு 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
அர்ப்பணிப்பு மிக்க நடிகர்
முதல் இன்னிங்ஸ் சரியாக ஒர்க் அவுட் ஆகாத நிலையில், தனக்கான 2வது இன்னிங்ஸை சிறப்பாக அமைத்துக் கொண்டார் விக்ரம். நடிப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அர்ப்பணிப்புடன் தன்னை வருத்திக்கொள்ளும் அளவுக்கு கலைஞன் கிடைப்பதெல்லாம் சினிமாவில் வரம். ஆனால் அது விக்ரமுக்கு மட்டுமே உள்ளது என சொல்லலாம்.
அப்படி சேது படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்ரம் நடித்த படம் ‘தில்’. லயோலா கல்லூரியில் தன்னுடன் படித்த நண்பரான தரணி தான் இப்படத்தை இயக்கினார். விக்ரமை ஒரு ஆக்ஷன் நாயகனாக தில் படம் நிறுவியது. இந்த படத்தில் லைலா, விவேக், நாசர், மயில்சாமி,வையாபுரி, ஆஷிஷ் வித்யார்த்தி என பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
காவல்துறையில் இணைந்து பணியாற்ற நினைக்கும் நடுத்தர குடும்பத்து இளைஞனான விக்ரமுக்க்கு ஒரு சண்டையில் காவல்துறை அதிகாரியான ஆஷிஷ் வித்தியார்த்தி உடன் மோதல் ஏற்படுகிறது. இதனால் அவரின் போலீஸ் வேலைக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதனை தகர்த்து விக்ரம் காவல்துறையில் வேலைக்கு சேர்ந்தாரா என்பதே படத்தின் கதையாகும்.
காவல்துறையில் நேர்மையான அதிகாரிகளுக்கும், சீரழிவுகளின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான கண்ணோட்டத்தைக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. குடும்ப சென்டிமென்ட், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்து சரியாக அமைக்கப்பட்டதால் இப்படம் ரசிகர்களை கவர்ந்தது.
நடிகர்கள் விவேக்-மயில்சாமி-வையாபுரி மூவரின் கூட்டணியில் அமைந்த நகைச்சுவை ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. குறிப்பாக அந்தக் காலகட்டத்தில் சீரியல்களில் நிலவிய அபத்தங்களை கிண்டல் செய்திருந்தார் விவேக்.
மாஸ் காட்டிய வித்தியாசாகர்
உன் சமையலறையில், ஓ நண்பனே, தில் தில், கண்ணுக்குள்ள கெழுத்தி, மச்சான் மீச வீச்சருவா என வித்யாசாகர் இசையில் அனைத்து பாடல்களும் இன்றைக்கும் திரும்பத் திரும்பக் கேட்கப்படும் வகையில் உள்ளது. இந்த படத்தின் வெற்றிக்குப் பின் விக்ரம் - தரணி இருவரும் ‘தூள்’ படத்தில் இணைந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தில் படம் தெலுங்கு, இந்தி, வங்கம், கன்னடம் என நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.