அஜித் எனக்கு அண்ணன் மாதிரி.. நடிகர் சுமன் ஷெட்டி வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்டமா?
தமிழ் மக்கள் மனதில் நான் தனியிடம் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தெலுங்கு சினிமாவில் இருந்து வந்தாலும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என நடிகர் சுமன் ஷெட்டி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிக்கும்போது நடிகர் அஜித்குமார் எனக்கு மிகப்பெரிய அளவில் சப்போர்ட் செய்தார் என நடிகர் சுமன் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழில் ரவி மோகன் நடித்த ஜெயம் படத்தில் “அலிபாபா” என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் சுமன் ஷெட்டி. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த 7ஜி ரெயின்போ காலனி, குத்து, வரலாறு, படிக்காதவன், மண்ணின் மைந்தன், சண்டக்கோழி, கேடி, தோரணை என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் நடப்பு சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 97 நாட்கள் வரை விளையாடினார். சுமனின் பிக்பாஸ் வீடியோக்கள் தமிழ் மக்களிடத்திலும் மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுமன் ஷெட்டி, “தமிழ் மக்கள் மனதில் நான் தனியிடம் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தெலுங்கு சினிமாவில் இருந்து வந்தாலும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். தமிழில் நேரடியாக 70,80 படங்கள் வரை பண்ணினேன். அஜித், தனுஷ் கூட படங்கள் நடித்துள்ளேன். எனக்கு தமிழில் ஜெயம் படம் தான் அறிமுகப்படமாக அமைந்தது. 7 ஜி ரெயின்போ காலனி எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது சின்ன வயதில் இருந்தே ஆசை. ஜெயம் படம் முதலில் தெலுங்கில் தான் வெளியானது. அதைப் பார்த்த நடிகர் ரவி மோகன் அப்பா, தமிழில் என்னுடைய கேரக்டரில் சுமன் தான் நடிக்க வேண்டும் என விரும்பினார்.
அந்த கேரக்டரில் நான் நடிக்க 2 மாதங்கள் வரை காத்திருந்தார்கள். பகலில் ஹைதரபாத் ஷூட், இரவு தமிழ்நாட்டில் ஷூட் என மாறி மாறி நடித்தேன். எனக்கு தமிழில் நடிப்பதற்கு மொழி பிரச்னை இருந்தது. வரலாறு படம் நடிக்கும்போது அஜித் என்னிடம் தெலுங்கில் தான் உரையாடுவார். அவர் எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்தார். எனக்கு உடன்பிறந்த சகோதரர் மாதிரி உணர்வு ஏற்பட்டது.
என் பையன் தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என விரும்பினார். இதற்கு முன்னால் வாய்ப்பு வந்த நிலையில் நான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் அப்போது செல்ல முடியவில்லை. 7ஜி படத்தில் என்னுடைய கேரக்டரில் நடிக்க நிறைய பேர் ஆடிஷன் பண்ணினார்கள். இப்போது அப்படத்தின் 2ம் பாகம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.
தமிழில் நான் நிறைய வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். சினிமாவை தாண்டி எனக்கு எதுவும் தெரியாது. சின்ன படம், பெரிய படம் என்பது எல்லாம் எனக்கு தெரியாது. நான் சினிமாவில் காமெடியனாக மட்டுமே நடித்து வருகிறேன். ஆனால் எனக்கு நெகட்டிவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
எனக்கு அப்பா தான் ரொம்ப சப்போர்டாக இருந்தார். அவர் 2019ல் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார். அவர் இல்லாதது வாழ்க்கையில் மிகப்பெரிய வலியாக மாறி விட்டது” என தெரிவித்துள்ளார்.





















