Actor Srikanth: போதையின் பாதையில் நடிகர் ஸ்ரீகாந்த்.. இப்படி சீரழிந்து போயிட்டீங்களே! எப்படி வர வேண்டியவரு?
தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக வர வேண்டிய ஸ்ரீகாந்த் போதையில் சிக்கி தனது திரைவாழ்வை அழித்துக் கொண்டிருப்பது ரசிகர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு இன்று அதிகளவு எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளில் போதைப்பொருள் பயன்பாடு என்பது மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்றாக உள்ளது.
போதையின் பாதையில் நடிகர் ஸ்ரீகாந்த்:
சாதாரண மக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் இதில் சிக்கியிருக்கின்றனர். இந்த பட்டியலில் சிக்கி தற்போது போலீசிடம் சிக்கியிருப்பவர் நடிகர் ஸ்ரீகாந்த். நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைதாகியிருப்பது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் படமே ஹிட்டாகும் ஹீரோக்கள் மிக மிக குறைவே ஆகும். மிகப்பெரிய பிரபலங்களுக்கே அந்த வாய்ப்பு கிட்டாத நிலையில், நடிகர் ஸ்ரீகாந்திற்கு அந்த யோகம் கிட்டியது. சசி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான முதல் படம் ரோஜாக்கூட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2002ம் ஆண்டு வெளியான இந்த படம் குடும்பங்கள் கொண்டாடிய ஒரு வெற்றியாக இருந்தது.
அடுத்தடுத்து வெற்றி:
சாக்லேட் பாயாகவும், குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாகவும் இருந்த ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் உலா வருவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அடுத்த படமான ஏப்ரல் மாதத்திலும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. கல்லூரி நாயகனாகவும், காதல் நாயகனாகவும் வெற்றி மேல் வெற்றி தந்த ஸ்ரீகாந்த்திற்கு மனசெல்லாம் படம் பெரிய வெற்றியைத் தராவிட்டாலும், பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது, அடுத்த படமான பார்த்திபன் கனவு குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக ஸ்ரீகாந்தை ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுத் தந்தது.
சறுக்கியது எங்கே?
காதல் நாயகனாகவும், குடும்ப நாயகனாகவும் உலா வந்த ஸ்ரீகாந்த் ஜுட் படம் மூலமாக ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார். ஆனால், அந்த படம் பெரிய வெற்றியைத் தரவில்லை. அதன்பின்பு, வர்ணஜாலம் என்ற படமும் தோல்வியைத் தர மீண்டும் ஆக்ஷன் அவதாரத்தில் இறங்கிய போஸ் படமும் தோல்வியைத் தழுவியது.
பம்பர கண்ணாலே என்ற கலகலப்பான படத்தில் நடித்தார். அந்த படம் கலவையான வரவேற்பை பெற்றது. அதன்பின்பு, ஏப்ரல் மாத இயக்குனருடன் மீண்டும் இணைந்த ஸ்ரீகாந்த் நடித்த மெர்க்குரி பூக்கள் படம் சுமாரான வெற்றியை அவருக்கு தந்தது.
தோல்வி முகமான ஸ்ரீகாந்த்:
அதன்பின்பு, அவருக்கு எங்குமே வெற்றி என்பது திரையுலகில் வசப்படவே இல்லை. உயிர் படத்தில் அண்ணியால் காதலிக்கப்படும் கொழுந்தனராக நடித்திருப்பார். இந்த படம் படுதோல்வி அடைந்ததுடன் கதைத் தேர்வில் ஸ்ரீகாந்த் கவனம் செலுத்த வேண்டும் என்று வலுவான விமர்சனத்தையும் முன்னெடுத்தது. அடுத்து அவர் சசியின் இயக்கத்தில் பூ படத்தில் நடித்தாலும் அந்த படம் அவருக்கு ரோஜாக்கூட்டம் அளவிற்கு வெற்றியைத் தரவில்லை.
சுதா கொங்கராவின் முதல் ஹீரோ:
சுதா கொங்கராவின் முதல் படமான துரோகியில் அவர் கதாநாயகனாக நடித்தாலும் அந்த படமும் அவருக்கு தோல்வியையே தந்தது. அதன்பின்பு, விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்தில் 3வது கதாநாயகனாக நடித்தார். அந்த செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் மேலே வர எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வி. இந்த இடைவேளையில் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடிக்கத் தொடங்கினார். செளகார்பேட்டை, நம்பியார் என தொடர் தோல்வி படங்கள் ஸ்ரீகாந்தின் சினிமா மார்க்கெட்டையே சிதைத்தது.
மிகப்பெரிய வெற்றியுடன் திரை வாழ்வை தாெடங்கிய ஸ்ரீகாந்த், தயாரிப்பாளர்கள் தயங்கும் கதாநாயகனாகவே மாறத் தொடங்கினார். முதன்மை கதாநாயகனாக நடித்து வந்த ஸ்ரீகாந்த் வில்லன், இரண்டாவது ஹீரோ என்று தனது ரூட்டை மாற்றினார். காஃபி வித் காதல், கண்ணை நம்பாதே ஆகிய படங்களில் அவ்வாறு நடித்தார்.
தினசரி எனும் சோகம்:
அவரது நடிப்பில் வெளியான தினசரி படம் ஸ்ரீகாந்த் மீது அனைவருக்கும் மிகப்பெரிய பரிதாபத்தையும், விமர்சனத்தையும் உண்டாக்கியது. ஏனென்றால், ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், நண்பன் போன்ற படங்களில் நடித்த ஸ்ரீகாந்த் மிகவும் மோசமான திரைக்கதையில் நடித்ததாகவும், அவருடன் நடித்த கதாநாயகியின் நடிப்பின் மீதும் மிக கடுமையான விமர்சனங்கள் விழுந்தது.
திரை வாழ்வை அழித்த போதை:
மிகப்பெரிய உச்சத்திற்கு சென்றிருக்க வேண்டிய ஸ்ரீகாந்த் போதைப் பழக்கத்தின் காரணமாகவே தவறான கதைகளைத் தேர்வு செய்து நடித்தும், நடிப்பில் போதிய கவனம் இல்லாமல் இருந்தும் தற்போது போதை வழக்கில் கைதாகி இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். ஏனென்றால், போலீசாரின் விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்திற்கும் அவருக்கு போதைப்பொருள் வழங்கிய பிரசாத்திற்கும் கடந்த 5 ஆண்டுகளாக பழக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது.
அதாவது, பிரசாத்துடன் பழக்கம் ஏற்பட்டது முதலே மிகவும் சறுக்கலை நோக்கி திரைவாழ்வில் செல்லத் தொடங்கினார். கடந்த 5 ஆண்டுகளில் ஸ்ரீகாந்த் நடித்த எந்த படமும் வெற்றிபெறவில்லை. அவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த படங்களும் வெற்றியை பெறவில்லை. அவர் திரைவாழ்வில் மோசமான சூழலில் இருக்கும் நிலையில், போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அவர் மீது வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





















