‛வரலாற்றில் இவ்வளவு சுவாரஸ்யமா வந்தியத் தேவன் இருந்திருப்பானா?’ -நடிகர் சிவக்குமார் பேச்சு!
Karthi as Vandhiya Devan : வரலாற்றில் உண்மையாகவே இந்த கதாபாத்திரம் இத்தனை ஸ்வாரஸ்யமாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் படத்தில் படு ஸ்வாரஸ்யமாக சித்தரிக்கப்பட்டுள்ளது வந்திய தேவன் கதாபாத்திரம்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் காவிய திரைப்படம் "பொன்னியின் செல்வன்". கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் படமாக்கியுள்ளார் மணிரத்னம். இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சிவகுமார் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் பற்றியும் அவர்களின் சிறப்பு பற்றியும் விவரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு :
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாக தயாராக உள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ஒட்டுமொத்த திரையுலகமே இந்த படத்திற்காக காத்து கொண்டு இருக்கிறது.
வந்திய தேவன் கதாபாத்திரம் :
இப்படத்தில் வந்திய தேவனாக நடிகர் கார்த்தி நடித்துள்ளார். கார்த்தியின் தந்தை மற்றும் நடிகரான சிவகுமார் இந்த வந்திய தேவன் கதாபாத்திரம் குறித்து கூறுகையில் " படத்தின் நாயகனான இந்த கதாபாத்திரம் அறிமுக காட்சி முதல் படத்தை நகர்த்தி செல்லும் ஒரு முக்கியமான கதாபாத்திரம். வரலாற்றில் உண்மையாகவே இந்த கதாபாத்திரம் இத்தனை ஸ்வாரஸ்யமாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் படத்தில் படு ஸ்வாரஸ்யமாக சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த கதாபாத்திரம். படத்தின் ஹீரோ என்றால் வழக்கமாக அவன் தான் எல்லா இடத்திலேயும் ஜெயிப்பான் என்ற ஃபார்முலாவை உடைத்துள்ளது இந்த கதாபாத்திரம். அடிபடுவது, அசிங்கப்படுத்துவது, அவமானப்படுவது, தப்பு செய்துவிட்டு அசடு வழிவது என ஒரு சாதாரண மனிதனை போல உருவாக்கியுள்ளார்கள். வந்திய தேவனை தலைமுறைகள் கடந்தும் ஒரு காவிய தலைவனாக போற்றும்படி சித்தரித்துள்ளார் கல்கி.
No one can describe #vandhiyathevan better than this @Karthi_Offl must be a proud son! https://t.co/7l7US4hXk8
— Rajasekar (@sekartweets) September 6, 2022
நாவலை போலவே இப்படமும் நிலைத்து நிற்கும்:
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை போலவே இந்த திரைப்படமும் தலைமுறைகளை தாண்டி, காலம் கடந்து மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடிக்கும். இந்த படத்தின் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என ஒரு பங்களிப்பாக இருந்த ஒவ்வொருவரும் அதிர்ஷ்டசாலிகள். இப்படத்தில் வந்திய தேவனாக தனது மகன் கார்த்தி நடிப்பது அவருக்கு பெருமை. அவரை தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தை இத்தனை சிறப்பாக செய்ய இயலாது.
மற்ற முக்கிய கதாபாத்திரங்கள்:
மேலும் இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் மற்றும் சின்ன பழுவேட்டரையராக பார்த்திபனும், நந்தினியாக ஐஷ்வர்யா ராய் மற்றும் குந்தவையாக த்ரிஷா நடித்துள்ளனர். இவர்களை தவிரவும் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, நாசர், ரஹ்மான், பிரபு, ரியாஸ் கான், நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியாகும் செப்டம்பர் 30ம் தேதி நிச்சயம் திரையரங்குகளில் ஒரு திருவிழா கோலம் போல காட்சியளிக்கப்போகிறது. மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் ரசிகர்கள் மற்றும் திரை கலைஞர்கள்.