Sendrayan: பிளாக்கில் டிக்கெட் விற்று போலீஸிடம் மாட்டிய சென்ட்ராயன்.. அவர் நடிச்ச படத்துக்கே இந்த நிலைமையா?
சார் நான் இந்த படத்தில் நடித்துள்ளேன் என சொன்னதும், ஆமாயா அந்த பைக் திருடனா நடிச்சிருந்ததை பார்த்தேன் என சப் இன்ஸ்பெக்டர் பாராட்டினார் என்றார் சென்ட்ராயன்
பிரபல நடிகர் சென்ட்ராயன் தான் நடித்த படத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்ற விஷயத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறனின் அறிமுக படமாக வெளியானது பொல்லாதவன். இந்த படத்தில் தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, கிஷோர், டேனியல் பாலாஜி, கருணாஸ், சந்தானம் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான பொல்லாதவன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் நடிகராக சென்ட்ராயன் அறிமுகமாகியிருந்தார். பொல்லாதவன் படத்தின் முக்கிய காட்சியாக வரும் பைக் திருட்டில் திருடனாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தார்.
இதனிடையே இந்த படத்தின் ரிலீஸின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை அவர் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், “பொல்லாதவன் படத்தில் நான் நடித்து முடித்து விட்டு கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். அந்த படம் ரிலீஸான நாளில், சென்ட்ராயன் நடித்திருக்கான், நம்ம எல்லாரும் போய் படம் பார்க்கலாம் என கம்பெனி ஓனர் 20 டிக்கெட் வாங்கிவிட்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக படம் வெளியாகும் நாளில் கம்பெனியில் ஒருவருக்கு கல்யாணம் என அனைவரும் ஆந்திராவுக்கு சென்று விட்டனர்.
இதனால் அந்த ஓனர் என்னை அழைத்து டிக்கெட்டுகளை கொடுத்து நாங்க ஊருக்கு போக வேண்டி இருப்பதால் உன் நண்பர்களை அழைத்து செல் என சொன்னார். நானும் டிக்கெட்டை வாங்கி விட்டு வந்துட்டேன். தியேட்டர் கிட்ட வரும்போது எனக்கு ஒரு ஆசை வந்தது. எதற்கு நாம் டிக்கெட்டை நண்பர்களுக்கு கொடுக்க வேண்டும். பிளாக்கில் விற்றால் என்ன? என்று தோன்றியது. நான் நடிச்ச படத்துக்கு நானே பிளாக்கில் டிக்கெட் விற்றேன். காசி தியேட்டரில் ரூ.20 டிக்கெட்டை ரூ.40 என விற்றேன். இது உண்மையில் நடந்த சம்பவம். எங்கேயும் இதை வெளிப்படுத்தியது இல்லை.
அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் என்னை முதலில் பார்த்து விட்டு சென்று விட்டார். பின்பு திரும்பவும் வந்து என்னை அழைத்து, ‘எத்தனை நாளா பிளாக்கில் டிக்கெட் விற்கிறாய்?’ என கேட்டார். நான் இன்னைக்கு தான் வந்தேன் என சொன்னேன். ஆனால் சொன்னதை கேட்காமல் என்னை அங்கிருந்த போலீஸ் வாகனத்தில் ஏற்றினார். அப்போது என்னுடைய நல்ல நேரம் என நினைக்கிறேன். சப் இன்ஸ்பெக்டர் முதல் காட்சி படம் பார்த்து விட்டு வந்து பொல்லாதவன் ரொம்ப நல்லாருக்கு என சக போலீஸிடம் தெரிவித்து கொண்டு வாகனத்தில் பின்னாடி திரும்பி உட்காந்திருந்த என்னை பார்த்தார்.
சட்டென குழம்பியவரிடம், சார் நான் இந்த படத்தில் நடித்துள்ளேன் என சொன்னதும், ஆமாயா அந்த பைக் திருடனா நடிச்சிருந்ததை பார்த்தேன். சூப்பரா நடிச்சிருக்கய்யா என அவரும் பாராட்டி வெளியே விட்டார்” என சென்ட்ராயன் கூறியுள்ளார்.