ரஜினியோடு பீடி..ரகுவரனோடு ஒரு ரூபாய் காபி! : நடிகர் சத்யேந்திரா ஷேரிங்ஸ்
கையில் இருந்த காசைப் போட்டு பீடிக் கட்டுகளை வாங்கினோம். 30 பைசாவுக்கு டீ வாங்கி ஆறு பேர் பகிர்ந்துகொண்டோம். இப்படியே 8 -10 நாட்கள் அவருடன் பேசிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, பிரசாத் ஸ்டுடியோஸ், மக்கள் கலை விழாக்கள் என மாநகரத்தின் கலர்ஃபுல்லான பகுதிகளில் ஜோல்னா பையும் பரட்டைத் தலையுமாக இந்த நபரை நீங்கள் சந்தித்திருக்கலாம். நடிகர் சத்யேந்திரா. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இதுதவிர குறும்படங்களில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல்வேறு அவதாரங்கள் இவருக்கு உண்டு.
நடிகர்கள் ரஜினி மற்றும் ரகுவரன் ஆகியோரின் தொடக்க காலங்களில் அவர்களுடன் பயணித்திருக்கிறார். தனது சினிமா அனுபவம் குறித்து அண்மையில் பகிர்ந்துகொண்டார் அவர். அதில்,”நான் பிறந்து வளர்ந்தது கர்நாடகாவில். நடிப்புக்கான வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தபோதுதான் என்னை சிவாஜி ராவ் என்கிற ஒரு நபரை போய் பார்க்க சொன்னார்கள். அப்போது அவர் தனது முதல் படத்தில் நடித்திருந்தார். ஒரு வீட்டின் மாடி அறையில் அவர் தங்கியிருந்தார்.அவருக்கு 300 ரூபாய் சம்பளம்.எனக்கு கையில் பைசா இல்லை. ஒரு ரூபாய் கூடப் பெரிய காசு. போய் சந்தித்தேன்.கன்னடத்தில் பேசினோம். எல்லோரும் கையில் இருந்த காசைப் போட்டு பீடிக் கட்டுகளை வாங்கினோம். 30 பைசாவுக்கு டீ வாங்கி ஆறு பேர் பகிர்ந்துகொண்டோம். இப்படியே 8 -10 நாட்கள் அவருடன் பேசிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.அதன்பிறகு வெளியே ஒரு ஓட்டலில் சந்தித்தார். என்னை வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்தார். ஆனால் நான் தான் போகவில்லை.சினிமா நடிகர்களிடம் வாய்ப்பு கேட்பது ஏனோ எனக்கு உவப்பாக இல்லை” என்றார்.
ரகுவரன் இறக்கும் வரை அவருக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவராக இருந்த சத்யேந்திரா,”ரகுவரனின் முதல் படத்தில் இயக்குநர் அலுவலகம் வரை சென்று இதுதான் இடம் எனக் கைகாட்டிவிட்டு வந்தது நான் தான். அதன்பிறகு அடுத்தடுத்து படத்தில் நடிக்க தொடங்கினாலும் எங்கள் நட்பு அப்படியே இருந்தது. சிறுவயதிலேயே இறந்து போனாலும் 100 வயதுக்கான வாழ்வை வாழ்ந்துவிட்டுதான் அவர் இறந்தார்.அவருக்கு பெண் நண்பர்கள் நிறைய உண்டு. நீட்டாக குடித்தாலும் ஸ்டெடியாகவே காணப்படுவார்.அவருக்கு என தனி நடிப்பு பாணி உண்டு. தமிழ்சினிமாவில் இன்றளவும் நான் பெயர் சொல்லிக் கூப்பிடும் நபர்கள் இருவரில் ரகுவும் ஒருவர்.எல்லோரையும் அவரைப் பேட்டி எடுக்க வந்தால் தன்னை விட நான் சிறந்த நடிகன் என என்னை முன்னிலைப்படுத்தி பேட்டி எடுக்க வைத்தவர். அவர் இறந்தபோது நான் போய் பார்க்கவில்லை. வாழ்ந்தபோது உடனிருந்தேன் என்கிற நினைவும் திருப்தியும் இருக்கிறது. எனக்கு அது போதும்” என்கிறார் அவர்.
சத்யேந்திரா தமிழில் ஏழாவது மனிதன், மண்வாசனை, சத்யா, மீண்டும் ஒரு காதல் கதை, ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.